மந்தனாவுக்கு புத்தர் சிலையை பரிசாக வழங்கிய நேபாள அணி கேப்டன்
- நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
- நேபாளம் அணி வீராங்கனைகள் சிலர் ஸ்மிருதி மந்தனாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம்பெற்றுள்ளன. பி பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.
லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளில் முதல் இரண்டு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில், நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா செயல்பட்டார்.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நேபாளம் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனால் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இந்த போட்டி முடிந்த பின் நேபாளம் அணி வீராங்கனைகள் சிலர் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதற்கும் மேலாக நேபாளம் அணியின் கேப்டன் இந்து பர்மா, தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஸ்மிருதி மந்தனாவுக்கு புத்தர் சிலையை பரிசாக வழங்கினார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே மிகந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.