கிரிக்கெட் (Cricket)

கடைசி டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து திரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது

Published On 2023-02-28 05:02 GMT   |   Update On 2023-02-28 05:02 GMT
  • நியூசிலாந்து அணி தரப்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்களையும், டிம் சவுத்தி 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.
  • 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

வெலிங்டன்:

நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்து வந்தது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 435 ரன்னும், நியூசிலாந்து 209 ரன்னும் எடுத்தது. நியூசிலாந்து பாலோ-ஆன் ஆனதால் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடியது. இதில் அந்த அணி 483 ரன்கள் குவித்தது. இதனால் இங்கிலாந்துக்கு 258 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன் எடுத்து இருந்தது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. அந்த அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தன. முன்னாள் கேப்டன் ஜோரூட் சிறப்பாக விளையாடினார். அவர் 95 ரன் எடுத்து அவுட் ஆனார்.

இங்கிலாந்து 215 ரன்னுக்கு 8 விக்கெட்டை இழந்தது. 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பென் போக்ஸ்-ஜாக் லீச் நிதான மாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

ஸ்கோர் 251 ரன்னாக இருந்த போது 9-வது விக்கெட் விழுந்தது. பென் போக்ஸ் 35 ரன்னில் அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்து களம் இறங்கிய ஆண்டர்சன் ஒரு பவுண்டரி அடித்தார்.

இங்கிலாந்தின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆண்டர்சனை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வாக்னர் அவுட் ஆக்கினார். இங்கிலாந்து அணி 74.2 ஓவரில் 256 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி தரப்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்களையும், டிம் சவுத்தி 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இந்த வெற்றி மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என்ற நிலையில் சமனில் முடிந்தது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று இருந்தது. 

Tags:    

Similar News