மிட்செல், ஹென்றி அபாரம் - நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 373 ரன்களில் ஆல் அவுட்
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 373 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- மூன்றாம் நாள் முடிவில் இலங்கை 65 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 87 ரன்னும், கேப்டன் திமுத் கருணரத்னே 50 ரன்னுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 373 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய டேரில் மிட்செல் 102 ரன்னும், மேட் ஹென்றி 72 ரன்னும், டாம் லாதம் 67 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், லஹிரு குமாரா 3 விக்கெட்டும், ரஜிதா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
18 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. ஏஞ்சலோ மேத்யூஸ் 20 ரன்னுடனும், பிரபாத் ஜெயசூர்யா 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் இலங்கை அணி 65 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.