வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை - இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்
- முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 322 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய இலங்கை 262 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
கொழும்பு:
வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் ஏ - இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 322 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் உமர் யூசுப் 88 ரன்னும், முகமது ஹாரிஸ் 52 ரன்னும், முபாசிர் கான் 42 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ 85 பந்தில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஹன் அராச்சிகே 97 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், இலங்கை ஏ அணி 45.4 ஓவரில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ஏ அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பாகிஸ்தான் ஏ அணி சார்பில் அர்ஷத் இக்பால் 5 விக்கெட், முபாசிர் கான், சுபியான் முகிம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது அர்ஷத் இக்பாலுக்கு வழங்கப்பட்டது.