ஒருநாள் தரவரிசை: 2 நாளில் நம்பர் ஒன் இடத்தை இழந்த பாகிஸ்தான்
- ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-வது இடத்தில் உள்ளது.
- நியூசிலாந்தை 1-4 என வீழ்த்திய பாகிஸ்தான் அணி 112 புள்ளிகளுடன் உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 299 ரன்கள் எடுத்ததது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்களும், உசாமா மிர் மற்றும் ஷதாப் கான் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
300 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி ஒருநாள் தரவரிசையில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தை பிடித்தது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் நான்காவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் முறையாக பாகிஸ்தான் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. ஆனால் அந்த இடம் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை.
இருப்பினும், இந்தத் தொடருக்குப் பிறகு, பாகிஸ்தானின் தரவரிசையில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் தொடங்கும் முன், பாகிஸ்தான் 106 புள்ளிகளுடன் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்தது. நியூசிலாந்தை 1-4 என வீழ்த்திய பாகிஸ்தான் அணி 112 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்த ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் மீண்டும் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
ஐசிசி ஆண்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியா 113 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-வது இடத்தில் உள்ளது.