null
கோல்டன் ஹார்ட்.. அவரே மாதிரி நான் யாரையும் பார்த்ததில்ல.. ரோகித்தை புகழ்ந்த அஸ்வின்
- ரோகித் சர்மா நல்ல மனதை கொண்டுள்ளதாலேயே இன்று இந்த உச்சத்தை எட்டியுள்ளார்.
- சுயநலமாக சிந்திக்க கூடிய இந்த சமூகத்தில் அவரைப்போல் மற்றவர்களின் நலனை நினைப்பவர்கள் அரிதானவர்கள்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ராஜ்கோட் நகரில் நடந்த 2-வது போட்டியில் 500-வது விக்கெட்டை எடுத்து சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது நாள் இரவோடு இரவாக பாதியிலேயே தனி விமானம் மூலம் வெளியேறினார். குறிப்பாக குடும்பத்தில் அவசர நிலை ஏற்பட்டதால் பாதியிலேயே வெளியேறிய அவர் மேற்கொண்டு விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த நாளே இந்திய அணிக்காக விளையாட வந்தார்.
இந்நிலையில் அந்த கடினமான நேரத்தில் ரோகித் சர்மா சுயநலமின்றி உதவினார் என தமிழக வீரர் அஸ்வின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது:-
அம்மா சுயநினைவுடன் இருக்கிறாரா என்று கேட்டேன். பார்க்கும் நிலையில் இல்லை என்று டாக்டர் என்னிடம் கூறினார். அதனால் நான் அழ ஆரம்பித்தேன். எனவே நேரில் சென்று பார்க்க ஒரு விமானத்தை தேடினேன். ஆனால் ராஜ்கோட் விமான நிலையத்தில் 6 மணிக்கு மேல் எந்த விமானமும் இல்லை. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அப்போது என்னுடைய அறைக்கு வந்த ரோகித் மற்றும் ராகுல் பாய் ஆகியோர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உடனடியாக குடும்பத்தை சென்று பார் என்று சொன்னார்கள்.
ரோகித் எனக்கு தனி விமானத்தை ஏற்பாடு செய்வதாக கூறினார். அணியின் உடற்பயிற்சியாளரான கமலேஷ் எனக்கு மிகவும் நல்ல நண்பர். அவரை என்னுடன் சென்னைக்கு செல்லுமாறு ரோகித் சொன்னார். இருப்பினும் அவரை நான் திரும்பி இருக்கச் சொன்னேன்.
ஆனால் கீழே கமலேஷும் செக்யூரிட்டியும் எனக்காக காத்திருந்தனர். விமான நிலையம் நோக்கி செல்லும் வழியில் கமலேசை அழைத்த ரோகித் சர்மா கடினமான நேரத்தில் என்னுடன் இருக்கும் படி கேட்டுக் கொண்டார். அப்போது இரவு 9.30 மணி. நான் வியந்து போனேன். அதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. விமானத்தில் நான் பேசுவதற்கு அந்த இருவர் மட்டுமே இருந்தனர். வீட்டுக்கு திரும்பும் பயணம் முழுவதும் ரோகித் கமலேஷ்க்கு போன் செய்து என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
அது போன்ற நேரத்தில் நானும் கேப்டனாக இருந்தால் என்னுடைய வீரரை வீட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லியிருப்பேன். ஆனால் துணைக்கு ஆள் அனுப்பி அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்க்குமாறு சொல்லியிருப்பேனா? என்பது தெரியாது.
அன்றைய நாளில் தான் ரோகித் சர்மாவில் நான் சிறந்த தலைவரை பார்த்தேன். நான் பல கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன். ஆனால் ரோகித் சர்மா நல்ல மனதை கொண்டுள்ளதாலேயே இன்று இந்த உச்சத்தை எட்டியுள்ளார். டோனிக்கு நிகராக அவர் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றார். கடவுள் அதை எளிதாக கொடுக்க மாட்டார். அவருக்கு அந்த அனைத்தையும் விட கடவுள் இன்னும் பெரிதாக கொடுப்பார். ஏனெனில் சுயநலமாக சிந்திக்க கூடிய இந்த சமூகத்தில் அவரைப்போல் மற்றவர்களின் நலனை நினைப்பவர்கள் அரிதானவர்கள்.
கேப்டனாக வீரருக்கு எந்த கேள்வியுமின்றி ஆதரவு கொடுக்கும் அவர் மீது ஏற்கனவே நான் மரியாதை வைத்துள்ளேன்.
இவ்வாறு அஸ்வின் கூறினார்.