null
7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான்
- சாம்சன் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- துருவ் ஜூரல் 52 ரன்கள் எடுத்து அசத்தினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி லக்னோ அணியின் டி காக், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் டி காக். ஆனால் அடுத்த பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்த ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் டக்அவுட்டில் வெளியேறினார். இதன்மூலம் 2 ஓவரில் 11 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை லக்னோ அணி இழந்தது.
அதன்பின் கேஎல் ராகுல் உடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. மேலும், அணியின் ரன்ரேட்டை 10-க்கு கொண்டு வந்தது. பவர்பிளேயில் 46 ரன்கள் அடித்திருந்தது. 10 ஓவரில் 94 ரன்கள் சேர்த்திருந்தது.
கேஎல் ராகுல் 31 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் தீபக் ஹூடா 30 பந்தில் அரைசதம் அடித்தார். அ அரைசதம் அடித்த அடுத்த பந்தில் தீப் ஹூடா ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். லக்னோ அணி 15 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.
16-வது ஓவரின் முதல் பந்தில் பூரன் ஆட்டமிழந்தார். அவர் 11 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். 5-வது விக்கெட்டுக்கு கேஎல் ராகுல் உடன் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்தார்.
18-வது ஓவரில் கே.எல். ராகுல் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 48 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்ஸ் உடன் அவர் 76 ரன்கள் அடித்தார்.
கடைசி மூன்று ஓவரில் குறைவான ரன்களே கிடைக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் அடித்தது.
இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 24, பட்லர் 34 என வெளியேறினர். அடுத்து வந்த ரியான் பராக் 14 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து சாம்சன்- ஜூரல் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
சிறப்பாக ஆடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். லக்னோ தரப்பில் யாஷ் தாகூர், ஸ்டோய்னிஸ், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.