ரஞ்சி டிராபி: ஜெகதீசன் இரட்டை சதத்தால் தமிழ்நாடு அணி 489 ரன்கள் குவிப்பு
- தமிழ்நாடு அணி 144 ஓவரில் 489 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
- ரெயில்வேஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவின் முதல்தர போட்டியான ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு நாட்கள் கொண்ட போட்டியான இதில் 3-வது போட்டி நேற்று தொடங்கியது. கோவை எஸ்.ஆன்.ஆர். கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் தமிழ்நாடு- ரெயில்வேஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரரான ஜெகதீசன் முதல்நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் தமிழ்நாடு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்திருந்தது. ஜெகதீசன் 155 ரன்களுடனும், முகமது அலி 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. முகமது அலி 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாய் கிஷோர் ஜெகதீசனுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். சாய் கிஷோர் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஜெகதீசன் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.
சாய் கிஷோர் ஆட்டமிழந்த பிறகு எம். முகமது 20 ரன்னிலும், அஜித் ராம் 17 ரன்னிலும், வாரியார் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க தமிழ்நாடு அணி 144 ஓவரில் 489 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஜெகதீசன் 245 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் ரெயில்வேஸ் அணி களம் இறங்கியது. இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது தமிழ்நாடு அணி 363 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியில் தமிழ்நாடு அணி 111 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. திரிபுராவுக்கு எதிரான 2-வது போட்டி டிராவில் முடிந்தது.