கிரிக்கெட் (Cricket)

டி20 போட்டிகளின் மிக சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று: ரஷீத் கான் பெருமிதம்

Published On 2024-06-08 12:16 GMT   |   Update On 2024-06-08 12:16 GMT
  • டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
  • ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், பரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

கயானா:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 15.2 ஓவரில் 75 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 84 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், பரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில், வெற்றி பெற்ற பிறகு பேட்டியளித்த ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கூறியதாவது:

நியூசிலாந்து போன்ற பெரிய அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. எங்களின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். பேட் மற்றும் பந்தில் எங்களின் சிறப்பான செயல் திறன் இது. இப்படிப்பட்ட ஒரு அணியை வழிநடத்த நான் பெருமைப்படுகிறேன்.

எங்கள் பந்துவீச்சாளர்கள் திறமையைப் பயன்படுத்தி பந்து வீசும் பொழுது எங்களுக்கு எதிராக 160 ரன்களை சேசிங் செய்வது கடினம். நாங்கள் திறமையை சரியாகப் பயன்படுத்தினால் எங்களை வீழ்த்துவது கடினம். வெற்றியோ, தோல்வியோ நாம் செய்ய வேண்டிய விஷயங்களைச் சரியாக செய்யவேண்டும். முடிவைப் பற்றி எப்பொழுதும் கவலைப்படுவது கிடையாது.

பந்துவீச்சில் எங்களுக்கு பரூக்கி மிகச்சிறந்த தொடக்கத்தை கொடுத்து வருகிறார். இரு போட்டிகளிலும் அவர் பந்து வீசிய விதம் ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து தன்னுடைய பந்துவீச்சில் பணிபுரிந்தால் அவர் இதைவிட இன்னும் திறமையாக வரமுடியும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News