கிரிக்கெட் (Cricket)

டிராவிட், கவாஸ்கர் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா

Published On 2024-03-09 06:37 GMT   |   Update On 2024-03-09 06:37 GMT
  • ராகுல் டிராவிட் டெஸ்டில் 36 சதமும், ஒரு நாள் போட்டியில் 12 செஞ்சூரியும் (மொத்தம் 48) அடித்துள்ளார்.
  • ரோகித் சர்மா டெஸ்டில் 12 சதமும், ஒரு நாள் போட்டியில் 31 மற்றும் 20 ஓவரில் 5 சதமும் அடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 162 பந்துகளில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் 103 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் அவர் 2-வது சதம் அடித்துள்ளார். ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் 131 ரன் எடுத்து இருந்தார்.

59-வது டெஸ்டில் விளையாடி வரும் ரோகித் சர்மா நேற்று தனது 12-வது சதத்தை பதிவு செய்தார். ஒட்டு மொத்த சர்வதேச போட்டிகளில் 48-வது செஞ்சூரியை அடித்தார். இதன் மூலம் அவர் முன்னாள் கேப்டனும், தற்போதைய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டை சமன் செய்தார்.

36 வயதான ரோகித் சர்மா டெஸ்டில் 12 சதமும், ஒரு நாள் போட்டியில் 31 மற்றும் 20 ஓவரில் 5 என ஆக மொத்தம் 48 சதங்களை பதிவு செய்துள்ளார்.

ராகுல் டிராவிட் டெஸ்டில் 36 சதமும், ஒரு நாள் போட்டியில் 12 செஞ்சூரியும் (மொத்தம் 48) அடித்துள்ளார்.

இருவரும் தற்போது 10-வது இடங்களில் உள்ளனர். தெண்டுல்கர் 100 சதத்துடன் முதல் இடத்திலும், விராட் கோலி 80 செஞ்சூரியுடன் 2-வது இடத்திலும், ரிக்கி பாண்டிங் 71 சதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 4-வது சதத்தை (14 போட்டி) ரோகித் சர்மா எடுத்தார். இதன் மூலம் அவர் கவாஸ்கர் சாதனையை சமன் செய்தார். கவாஸ்கர் 38 டெஸ்டில் 4 சதம் எடுத்து இருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக ராகுல் டிராவிட், தெண்டுல்கர் தலா 7 செஞ்சூரியும், அசாருதீன் 6 சதமும், வெங்சர்க்கார், விராட் கோலி தலா 5 செஞ்சூரியும் அடித்துள்ளனர்.

Tags:    

Similar News