null
2007-ல் எனக்குதான் கேப்டன் பதவி வாய்ப்பு வந்தது: டோனியை பரிந்துரைத்தது ஏன்?- விவரிக்கும் சச்சின்
- 2007-ல் பிசிசிஐ தனக்கு கேப்டன் பதவியை வழங்க தயாராக இருந்தது.
- என்னுடைய உடல் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். முகமது அசாருதீனை கேப்டன் பதவியில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்த நிலையில், 1996-ல் இருந்து 1999 வரையிலான காலக்கட்டத்தில் சச்சின் தெண்டுல்கர் கேப்டனாக பணியாற்றினார்.
ஆனால் அவர் கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய அணியும் மிகப்பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அவரது தனிப்பட்ட ஆட்டமும் சரிவை கண்டது. இதனால் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒரு வீரராக தொடர்ந்து விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
சச்சின் தெண்டுல்கருக்குப் பிறகு சவுரவ் கங்குலி கேப்டன் பதவியை ஏற்று, அணியில் பல மாற்றம் செய்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து எதிர்கால அணியை உருவாக்கினார்.
அப்போதுதான் எம்.எஸ். டோனி இந்திய அணியில் அறிமுகம் ஆனார். குறுகிய வருடத்திற்குள் கேப்டன் பதவியை ஏற்று ஜொலித்தார்.
எம்.எஸ். டோனியின் தலைமையின் கீழ் சச்சின் தெண்டுல்கர் நீண்ட காலம் விளையாடியுள்ளார். எம்.எஸ். டோனியை கேப்டனாக்க பரிந்துரை செய்தது சச்சின் தெண்டுல்கர்தான் என்பது எல்லோருக்குத் தெரியும். தற்போது அதற்கான காரணத்தை அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் "2007-ல் பிசிசிஐ கேப்டன் பதவி வாய்ப்பை எனக்கு வழங்கியது. ஆனால், என்னுடைய உடல் அப்போது மிகவும் மோசமாக இருந்தது.
டோனியுடன் மனநிலை மிகவும் நிலையானது. அமைதியானவர். சரியான முடிவை எடுப்பார் என்ற அவர் மீதான என்னுடைய அவதானிப்பு மிகவும் சிறந்த வகையில் இருந்தது. இதனால் அவரை கேப்டன் பதவிக்கு பரிந்துரை செய்தேன்" இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.