கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தான் டி20 அணி கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய ஷாஹீன் அப்ரிடி திட்டம்

Published On 2024-03-30 09:09 GMT   |   Update On 2024-03-30 09:09 GMT
  • 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப்பின் பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
  • அணியின் எதிர்காலம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆலோசனை நடத்தவில்லை என ஷாஹீன் அப்ரிடி அதிருப்தி.

பாகிஸ்தான் அணியின் டி20 அணி கேப்டனாக இருப்பவர் ஷாஹீன் அப்ரிடி. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஜொலிக்காததைத் தொடர்ந்து பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் டி20 அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் நியூசிலாந்து அணிக்கெதிராக பாகிஸ்தான் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் பாகிஸ்தான் 1-4 எனத் தோல்வியடைந்தது.

விரைவில டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. டி20 உலகக் கோப்பை, டி20 அணியின் எதிர்கால திட்டம், பயிற்சியாளர் நியமனம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்றும் பாகிஸ்தான கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி ஷாஹீன் அப்ரிடியிடம் கலந்து ஆலோசனை நடத்தவில்லை. இது ஷாஹீன் அப்ரிடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே பாபர் அசாம் உடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதில் ஷாஹீன் அப்ரிடி கலந்து கொள்ளவில்லை. கேப்டனாக தொடரை வைக்க விருப்பம் இல்லை என்றால் தன்னை நீக்கி விட்டு, அதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என ஷாஹீன் அப்ரிடி எதிர்பார்க்கிறார்.

மேலும் அவருக்கு நெருக்கமான சிலர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாகிஸ்தான கிரிக்கெட் போர்டு தொடர்பான குழப்பத்தில் இருந்து விலகி இருக்க வலியுறுத்தியுள்ளனர். இதனால் ஷாஹீன் அப்ரிடி கேப்டன் பதவியை ராஜினாமா செய்யலாம் எனத் தெரிகிறது.

தற்போது ஷாஹீன் அப்ரிடி காகுலில் உள்ள பயிற்சி முகாமில் உள்ளார். இவர் சீனியர் வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சதாப் கான், பஹர் சமான் ஆகியோரிடம் கேப்டன் பதவி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் தனது முடிவை அறிவிக்கலாம்.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் அணியை இரண்டு முறை சாம்பியன் பட்டம் வாங்கும் அளவிற்கு வழிநடத்தி சென்றார். ஆனால், சமீபத்தில் முடிவடைந்த தொடரில் கடைசி இடம் பிடித்தது.

Tags:    

Similar News