டி20 உலக கோப்பையில் விளையாடும் அழைப்பை நிராகரித்த சுனில் நரைன்: காரணம் தெரியுமா?
- டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
- இதில் விளையாடக் கோரி வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் சுனில் நரைனுக்கு அழைப்பு விடுத்தார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரைன்.
இதற்கிடையே, வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடக் கோரி அந்த அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் சுனில் நரைனுக்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, சுனில் நரைன் ஓய்விலிருந்து வந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடப் போவதில்லை என சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டும் என அழைப்புகள் வந்தன. நான் ஓய்விலிருந்து திரும்ப வந்து டி20 உலகக் கோப்பையில் ஆட வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். ஆனால் அந்தக் கதவை நான் ஏற்கனவே மூடிவிட்டேன். வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களைத் தொடர்ந்து ஆதரிப்பேன். அவர்கள் கோப்பையை வெல்ல வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.