null
360 டிகிரி வீரர் என்ற நிலையை அடைந்து விட்டார்- சூர்யகுமார் யாதவை பாராட்டிய ஏபி டிவில்லியர்ஸ்
- உலகிலேயே 360 டிகிரியில் விளையாடக்கூடிய ஒரே ஒரு வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் மட்டுமே என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.
- 360 டிகிரி என்பதையும் தாண்டிய உச்சத்தை நீங்கள் அடையப் போகிறீர்கள் என்று தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்று எதிர்பாராத திருப்பங்களுடன் முடிந்துள்ளது. இந்தியா 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக முதல் 4 போட்டிகளிலேயே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்தியா நவம்பர் 6ஆம் தேதியன்று நடைபெற்ற ஜிம்பாபேவுக்கு எதிரான சம்பிரதாய கடைசி போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது.
6 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 61* (25) ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முகமது ரிஸ்வானை முந்தி சாதனை படைத்துள்ளார்.
இந்திய ரசிகர்களும் ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் வீரர்களும் அவரை இந்தியாவின் ஏபிடி என்றும் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்றும் புகழாரம் சூட்டி வருகிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக மீண்டும் ஒருமுறை நேற்றைய போட்டியில் வெளுத்து வாங்கிய அவரை நீங்கள் ஏபி டி வில்லியர்ஸ் போல மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேனாக செயல்படுகிறீர்கள் என்று போட்டி முடிந்ததும் முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் பாராட்டினார்.
அதற்கு உலகிலேயே ஏபி டீ வில்லியர்ஸ் மட்டுமே 360 வீரர் என்று மறுப்பு தெரிவித்த சூர்யகுமார் யாதவ் அடக்கத்துடன் பேசியது பின்வருமாறு. உலகிலேயே 360 டிகிரியில் விளையாடக்கூடிய ஒரே ஒரு வீரர் மட்டுமே உள்ளார் என்று கூறினார். அவரது இந்த அடக்கமான பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி ஏபி டீ வில்லியர்ஸ் கவனத்தை நேரடியாக ஈர்த்தது.
அதனால் மகிழ்ச்சியடைந்த அவர் நீங்கள் அந்த இடத்திற்கு மிகவும் வேகமாக வந்து கொண்டிருக்கிறீர்கள். சொல்லப்போனால் 360 டிகிரி என்பதையும் தாண்டிய உச்சத்தை நீங்கள் அடையப் போகிறீர்கள் என்று தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார். இது பற்றி ஏபி டிவில்லியர்ஸ் ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு. "நீங்கள் அங்கே மிகவும் விரைவாக வருகிறீர்கள் நண்பரே. (சொல்லப்போனால்) இன்னும் அதிகமாக. இன்று மிகச் சிறப்பாக விளையாடினீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். அப்படி இந்திய வீரரை மனதார பாராட்டிய ஏபி டீ வில்லியர்ஸ் கொடுத்த அந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.