நடராஜனை புறக்கணித்த பிசிசிஐ: கண்டனம் தெரிவித்த ரசிகர்கள்
- டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்தது.
- டெத் ஓவரில் நடராஜன் யார்க்கர் பந்துகளை வீசி எதிரணியை நிலைகுலையச் செய்வார்.
புதுடெல்லி:
ஐசிசி சார்பில் அடுத்த மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுடன் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே "நடராஜன்" என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான அணியில் நடராஜன் இடம்பெறாதது சமூக வலைத்தளங்களில் பெறும் விவாதத்தை ஏற்படுத்தியது.
பந்துவீச்சில் இடம் பெற்றுள்ள அர்ஷதீப் சிங் அல்லது முகமது சிராஜுக்கு பதிலாக நடராஜனை தேர்வு செய்திருக்கலாம் என தங்கள் ஆதங்கத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக பந்து வீசி வரும் நடராஜனுக்கு டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சீசனில் இதுவரை விளையாடிய 7 போட்டியில் அவர் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.