கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக்கோப்பை: இந்தியா- அயர்லாந்து இன்று மோதல்

Published On 2024-06-05 00:53 GMT   |   Update On 2024-06-05 00:53 GMT
  • சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளன.
  • 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க்:

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் 8-வது லீக்கில் இந்திய அணி, அயர்லாந்தை (ஏ பிரிவு) சந்திக்கிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா என்று அனைத்து முன்னணி வீரர்களும் இருப்பதால் வலுவாக காணப்படுகிறது.

விராட் கோலியும், கேப்டன் ரோகித் சர்மாவும் தொடக்க ஆட்டக்காரராக இறங்கினால், ஆடும் லெவனில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சனை காட்டிலும் ரிஷப் பண்டுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

அயர்லாந்து சிறிய அணியாக கருதப்பட்டாலும், முந்தைய காலங்களில் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து இருக்கிறது. அதனால் அவர்களை துளி கூட சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று இந்திய வீரர்களை அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

போட்டி நடக்கும் நியூயார்க்கில் உள்ள ஆடுகளங்கள் செயற்கையாக அமைக்கப்பட்டவை. இந்த ஆடுகளத்தில் அதிரடி காட்டுவது அவ்வளவு எளிதல்ல. இதே மைதானத்தில் ஆடிய இலங்கை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெறும் 77 ரன்னில் அடங்கியதே அதற்கு உதாரணம். 'இங்குள்ள சூழலுக்கு ஏற்ப வீரர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இது போன்ற ஆடுகளங்களில் 140 ரன் கூட வெற்றிக்குரிய ஸ்கோராக இருக்கலாம்' என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

இந்த உலகக் கோப்பையுடன் பயிற்சியாளர் பணியில் இருந்து விடைபெறும் டிராவிட், உலகக் கோப்பையை வெல்வதற்குரிய வாய்ப்பை உருவாக்குவதே எங்களது இலக்கு என்றும் குறிப்பிட்டார்.

பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியில் ஆன்டி பால்பிர்னி, லோர்கன் டக்கர், டெக்டர், ஜார்ஜ் டாக்ரெல் உள்ளிட்டோர் நிலைத்து நின்று விட்டால் அதிரடியில் மிரட்டி விடுவார்கள். கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 183 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து கவனத்தை ஈர்த்தனர். இதனால் அதிக நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். முடிந்த வரை 20 ஓவர் முழுமையாக ஆட முயற்சிப்பார்கள்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளன. 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம்:-

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

அயர்லாந்து:

பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ரோஸ் அடைர், ஆன்டி பால்பிர்னி, நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், மார்க் அடைர், கர்டிஸ் கேம்பர், காரெத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், கிரஹாம் ஹூமே, ஜோஷ் லிட்டில், பாரி மெக்கர்த்தி, பென் ஒயிட், கிரேக் யங்,

நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Tags:    

Similar News