கிரிக்கெட் (Cricket)

ஸ்காட்லாந்தை கடைசி ஓவரில் வீழ்த்திய ஆஸ்திரேலியா - 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

Published On 2024-06-16 04:02 GMT   |   Update On 2024-06-16 04:02 GMT
  • டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார்.
  • சஃப்யன் ஷரிஃப், மார்க் வுட் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 35-வது போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங்கை செய்தது.

அந்த அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஜார்ஜ் முன்செ 23 பந்துகளில் 35 ரன்களை அடுத்து அவுட் ஆனார். இவரடுன் களமிறங்கிய மைக்கேல் ஜோன்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பிரெண்டன் மெக்குல்லென் 34 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். இதில் 2 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

 


அடுத்து வந்த கேப்டன் ரிச்சி பெரிங்டன் ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 42 ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும், ஆஷ்டன் ஆகர், நாதன் எல்லிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

181 ரன்களை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டேவிட் வார்னர், கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இவர்கள் முறையே 1, 8 மற்றும் 11 ரன்களை எடுத்தனர்.

 


ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், துவக்க வீரரான டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். இவர் 49 பந்துகளில் 68 ரன்களை அடித்து அவுட் ஆனார். இவருடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கஸ் ஸ்டாயினிஸ் 29 பந்துகளில் 59 ரன்களை விளாசினார்.

பேட்டிங்கை தொடர்ந்து ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டது. ஸ்காட்லாந்து அணி போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டு சென்ற போதிலும், 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 186 ரன்களை அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சார்பில் டிம் டேவிட் 14 பந்துகளில் 24 ரன்களுடனும், மேத்யூ வேட் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஸ்காட்லாந்து சார்பில் சஃப்யன் ஷரிஃப் மற்றும் மார்க் வுட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், பிராட் வீல் 1 விக்கெட் வீழ்த்தினர். 

Tags:    

Similar News