உடல் நலம் பாதித்த தாய்க்கு ஆட்ட நாயகன் விருதை அர்பணித்த மெக்காய்
- மெக்காய் 4 ஓவரில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- முதல் பந்தில் விக்கெட்டை இழந்தது பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தது.
மெக்காய்
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் மெக்காய் 4 ஓவரில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். விருதை தனது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தாய்க்கு அர்பணிப்பதாக அவர் கூறினார்.
இது குறித்து மெக்காய் கூறியதாவது:-
தன்னை ஒரு சிறந்த வீரராக ஆவதற்கு எப்போதும் உந்துதலாக இருக்கும் தனது உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய்க்கு இந்த சிறப்பு தருணத்தை அர்ப்பணிக்க விரும்புகிறேன். முதல் பந்தில் விக்கெட் இழந்தது பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தது. நான் எப்போதும் பவர்பிளேயில் விக்கெட்டுகளைத் தேடுவேன். மேலும் முந்தைய ஆட்டத்தில், நான் கொஞ்சம் அதிகமாக யோசித்தேன். சமீப காலமாக டி20-யில் விளையாடிய அனுபவம் மற்றும் சவால்கள் எனக்கு உதவியது.
இவ்வாறு அவர் கூறினார்.
மெக்காய் 2019-ல் தனது டி20 அறிமுக போட்டியை தொடங்கினார். இதுவரை அவர் 18 ஆட்டங்களில் விளையாடி 15.48 சராசரியில் 29 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.