இங்கிலாந்துடன் நாளை மோதல்: பாகிஸ்தான் அரை இறுதிக்கு தகுதி பெறுவது கடினம்
- அரை இறுதி வாய்ப்பில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை உள்ளன.
- பாகிஸ்தான் வெற்றி பெறுவதுடன், நியூசிலாந்தின் ரன் ரேட்டையும் முந்த வேண்டும்.
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டன.
இங்கிலாந்து, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டு விட்டன. அரை இறுதிக்கு தகுதி பெறும் 4-வது மற்றும் கடைசி அணி எது என்பதில் இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் நியூசிலாந்துக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
அரை இறுதி வாய்ப்பில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை உள்ளன. நியூசிலாந்து நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் ரன் ரேட் +0.743 ஆக உள்ளது.
பாகிஸ்தான் 8 புள்ளிகளுடன் (ரன் ரேட் +0.036) உள்ளது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை இங்கிலாந்துடன் மோதுகிறது. இதில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதுடன், நியூசிலாந்தின் ரன் ரேட்டையும் முந்த வேண்டும்.
ஆனால் அது பாகிஸ்தானுக்கு மிகவும் கடினமானது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ததால், இங்கிலாந்தை 287 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே நியூசிலாந்தின் ரன் ரேட்டை கடக்க முடியும். ஒரு வேளை இங்கிலாந்து முதலில் பேட் செய்து 150 ரன்கள் எடுத்தால் அந்த இலக்கை பாகிஸ்தான் 3.4 ஓவர்களிலேயே எடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து இமாலய ரன்களை குவித்து பின்னர் இங்கிலாந்தை குறைந்த ஸ்கோரில் சுருட்ட வேண்டும். இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தால் பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பு முடிந்து விடும்.
பாகிஸ்தானுக்கு சாதகமான சூழல் இல்லாததால் அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெறுவது கடினமானது.
8 புள்ளிகளுடன் உள்ள ஆப்கானிஸ்தானின் ரன் ரேட்-0.338 ஆக உள்ளது. அந்த அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றாலும் ரன் ரேட்டில் நியூசிலாந்து, பாகிஸ்தானை முந்துவது இயலாத காரியம்.