டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை- 16-வது இடத்துக்கு முன்னேறினார் ஸ்ரேயாஸ் அய்யர்
- ஆஸ்திரேலியா வீரர் லபுஸ்சேன் தரவரிசையில் தொடர்ந்து முதலிடம்.
- பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2-வது இடத்தில் உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 3-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள்.
ரிஷப் பண்ட் 6-வது இடத்திலும், ரோகித் சர்மா 9-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்டில் 87 மற்றும் 29 ரன் வீதம் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 10 இடங்கள் எகிறி 16-வது இடத்தை பிடித்துள்ளார். புஜரா 19-வது இடத்தையும், விராட் கோலி 14-வது இடத்தையும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரு இடம் முன்னேறி சக வீரர் ஜஸ்பிரித் பும்ராவுடன் 4-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.