நான்தான் ரோகித்தை கேப்டனாக நியமித்தேன் என்பதையே மறந்துவிட்டனர்- கங்குலி ஆதங்கம்
- விராட் கோலியிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
- பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி தான் ரோகித்திற்கு கேப்டன் பதவியை வழங்கினார்.
9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்தது. தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவைத் தோற்கடித்து உலக கோப்பையை கைப்பற்றியது.
20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.
2013 ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கு அடுத்து 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்றுள்ளது.
2019 ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு விராட் கோலியிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி தான் ரோகித்திற்கு கேப்டன் பதவியை வழங்கினார். அப்போது இந்த முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், ரோகித்தை கேப்டனாக்க முடிவு செய்தது குறித்து சவுரவ் கங்குலி பேசியுள்ளார்.
"இந்திய கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்தபோது எல்லோரும் என்னை விமர்சித்தனர். தற்போது ரோகித் தலைமையில் இந்திய அணி உலக கோப்பை வென்றதும் அனைவரும் விமர்சிப்பதை நிறுத்திவிட்டனர். மேலும், நான்தான் ரோஹித்தை கேப்டனாக நியமித்தேன் என்பதையே அனைவரும் மறந்துவிட்டனர் என்று என்று சவுரவ் கங்குலி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.