கிரிக்கெட் (Cricket)

இது 9-வது முறை... சாம்பியன் பட்டத்தை பெற முடியாமல் திணறும் போட்டியை நடத்தும் நாடுகள்

Published On 2024-06-24 10:00 GMT   |   Update On 2024-06-24 10:00 GMT
  • இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.
  • வெஸ்ட் இண்டீஸ் அணியும் உலகக்கோப்பையை தனது சொந்த மண்ணில் தவறவிட்டிருக்கிறது.

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 20 அணிகள் பங்கேற்றதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.

எட்டு அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் ஒரு முறை போட்டியிடும் வகையில் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியது.

ஆன்டிகுவா மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களை சேர்த்தது.

தென் ஆப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை குவித்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டக்வெர்த் லீவிஸ் முறைப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஆண்ட்ரே ரசல், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் சொந்த மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறி இருக்கிறது. அமெரிக்காவும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.


கடந்த 2022ம் ஆண்டு டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா அணியும் தனது டி20 உலகக் கோப்பையை தனது சொந்த மண்ணில் தவறவிட்டது. இதேபோல் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் உலகக்கோப்பையை தனது சொந்த மண்ணில் தவறவிட்டிருக்கிறது.

இதன்மூலம் போட்டிகளை நடத்தும் நாடுகள் 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

இந்நிலையில் அடுத்த டி20 உலகக் கோப்பை 2026-ல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News