மதுரை பாந்தர்ஸ் அணிக்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கோவை
- கோவை அணியில் அதிரடியாக ஆடிய முகிலேஷ், 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் குவித்தார்.
- மதுரை அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட், சன்னி சந்து, கிரன் ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்
திண்டுக்கல்:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கலில் நடைபெறும் 2வது ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி கேப்டன், பீல்டிங்கைத் தேர்வு செய்ய, கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது.
கோவை அணியின் துவக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜு, சாய் சுதர்சன் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தனர். சஜித் சந்திரன் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம், மறுமுனையில் சுரேஷ் குமார் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆறுதல் அளித்தார். அவர் 22 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் குவித்தார்.
அதன்பிறகு முகிலேஷ் அபாரமாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. தொடர்ந்து அதிரடி காட்டிய முகிலேஷ், 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது.
மதுரை அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட் கைப்பற்றினார். சன்னி சந்து, கிரன் ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.