ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அதிர்ச்சி தோல்வி
- இந்தியா 42.4 ஓவர்களில் 188 ரன்னில் சுருண்டது.
- வங்காளதேசம் 42.5 ஓவரில் இலக்கை எட்டியது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு ஏமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.
இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேகம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.
நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு அரையிறுதியில் இந்தியா- வங்காளதேச அணிகள் மோதின.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முஷின் கான் 50 ரன்களும, முருகன் அபிஷேக் 62 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா 42.4 ஓவர்களில் 188 ரன்னில் சுருண்டது. வங்காளதேச அணி சார்பில் மரூஃப் மிரிதா 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களம் இறங்கியது. அந்த அணி 34 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், அர்புல் இஸ்லாம் 90 பந்துகளில் 94 ரன்களும், அஹ்ரார் அமின் 101 பந்தில் 44 ரன்களும் அடிக்க வங்காளதேசம் 42.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலில் பேட்டிங் செய்து 47.5 ஓவரில் 193 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் தொடக்க வீரர் ஆர்யான்ஷ் சர்மா 46 ரன்களும், கேப்டன் அஃப்சல் கான் 55 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் உபைத் ஷா 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. அந்த அணியின் அசான் அவைஸ் 41 ரன்னில் ரன்அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சாத் பைக் 50 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 49.3 ஓவரில் 182 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.