கிரிக்கெட் (Cricket)

15 வருடங்களுக்கு பிறகு சதம்- சாதனை படைத்த வெங்கடேஷ் அய்யர்

Published On 2023-04-17 06:28 GMT   |   Update On 2023-04-17 06:28 GMT
  • அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் அய்யர் 51 பந்துகளில் வெங்கடேஷ் ஐயர் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
  • 6 பவுண்டரிகள் 9 சிக்சர் விளாசிய வெங்கடேஷ் அய்யர் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

மும்பை:

ஐபிஎல் போட்டியில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.

அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் பவுண்டரிகளையும், சிக்சர்களையும் பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். 49 பந்துகளில் அவர் சதம் விளாசினார். 51 பந்துகளில் வெங்கடேஷ் ஐயர் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது. 17.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து மும்பை வெற்றி கண்டது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 4 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு முன்னேறியது.

இந்நிலையில் கொல்கத்தா அணி வீரர் வெங்கடேஷ் அய்யர் பல சாதனைகளை படைத்துள்ளார். கொல்கத்தா அணிக்காக ஓர் இன்னிங்சில் அதிகபட்ச சிக்சர்களை விளாசியவர்கள் பட்டியலில் வெங்கடேஷ்ஐயர் 5-வது இடத்தில் உள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் அவர் 9 சிக்சர்களை பறக்கவிட்டார். 2008-ல் பெங்களூரு அணிக்கெதிராக கொல்கத்தா வீரர் மெக்கல்லம் 13 சிக்சர்களை பறக்கவிட்டு முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் ஆந்த்ரே ரஸல் (2018-ல் சென்னைக்கு எதிராக 11 சிக்சர்கள்) இருக்கிறார். 3-வது இடத்தில் ரஸலே (2019-ல் பெங்களூருக்கு எதிராக 9 சிக்சர்கள்) உள்ளார். 4-வது இடத்தில் தினேஷ் கார்த்திக் (2019-ல் ராஜஸ்தானுக்கு எதிராக 9 சிக்சர்கள்) உள்ளார்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக சதமடித்தவர் என்ற பெருமையை வெங்கடேஷ் ஐயர் பெற்றார். இதற்கு முன்பு 2008-ல் பெங்களூரு அணிக்கெதிராக கொல்கத்தா வீரர் மெக்கல்லம் 158 ரன்கள் விளாசியதே முதல் சதமாக இருந்தது. நேற்றைய ஆட்டத்தில் வெங்கடேஷ் ஐயர் விளாசிய சதம், கொல்கத்தா அணிக்கான 2-வது சதமாக அமைந்தது.

Tags:    

Similar News