கிரிக்கெட் (Cricket)

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: விதர்பா வெற்றிபெற 538 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை

Published On 2024-03-12 12:09 GMT   |   Update On 2024-03-12 12:09 GMT
  • மும்பை முதல் இன்னிங்சில் 224 ரன்னும், 2வது இன்னிங்சில் 418 ரன்னும் எடுத்தது.
  • விதர்பா முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

மும்பை:

89-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை, விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய மும்பை முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஷர்துல் தாகூர் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 75 ரன்னில் ஆட்டமிழந்தார். பிரித்வி ஷா 46 ரன்னும், லால்வாணி 37 ரன்னும் எடுத்தனர்.

விதர்பா சார்பில் யாஷ் தாகூர், ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 27 ரன்கள் எடுத்தார்.

மும்பை சார்பில் தவால் குல்கர்னி, தனுஷ் கோட்யான், ஷாம்ஸ் முலானி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து, 119 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. முஷீர் கான் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவருக்கு உறுதுணையாக ரகானே அரை சதமடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயஸ் அய்யர் 95 ரன்னில் வெளியேறினார். ஷம்ஸ் முலானி 50 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், மும்பை அணி 2வது இன்னிங்சில் 418 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

விதர்பா சார்பில் ஹர்ஷ் துபே 5 விக்கெட்டும், யாஷ் தாகூர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். மூன்றாம் நாள் முடிவில் விதர்பா அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது.

இன்னும் இரு நாட்கள் மீதமுள்ள நிலையில் விதர்பா அணி வெற்றிபெற 528 ரன்கள் தேவை என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News