உலக கோப்பையில் இந்தியாவின் தோல்வி நிச்சயம்- முன்னாள் பாகிஸ்தான் வீரர் அதிரடி கருத்து
- விராட் கோலி மகத்தான வீரர் என்றாலும் அவ்வப்போது தடுமாறுகிறார்.
- அவரால் பாபர் அசாம் போல தொடர்ந்து அசத்த முடிவதில்லை.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ந் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில் விராட் கோலியை விட பாபர் அசாம் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் பேட்ஸ்மேனாக இருப்பதால் இம்முறை 2023 உலக கோப்பையில் இந்தியாவை நிச்சயம் பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பல நேரங்களில் சில நட்சத்திர வீரர்களுக்கு இதுவே கடைசி உலகக்கோப்பையும் கேரியரின் கடைசி சில வருடங்களாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நீங்கள் வருவீர்கள். இம்முறை அது இந்தியாவுக்கு நடக்கிறது என்று உணர்கிறேன்.
குறிப்பாக நட்சத்திர வீரர்கள் அணியை விட பெரியவர்களாக உருவெடுக்கும் போது முக்கிய தருணங்களில் அணி நிர்வாகத்துக்கு சரியான முடிவை எடுப்பதில் கடினம் ஏற்படுகிறது. அந்த வகையில் அனைத்து துறைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் பாகிஸ்தானுக்கு இந்த முறை நல்ல வாய்ப்பிருக்கிறது. மேலும் ரோகித் சர்மாவால் எவ்வளவு நாட்கள் விளையாடி விட முடியும்? அதே போல விராட் கோலி பற்றிய கருத்துக்கள் என்ன? ஒருவேளை நீங்கள் விராட் கோலியை பாபர் அசாமுடன் ஒப்பிட்டால் ஒரு சீசனில் அபாரமாக செயல்படும் அவர் மற்றொரு சீசனில் திண்டாடுகிறார்.
அதாவது விராட் கோலி மகத்தான வீரர் என்றாலும் அவ்வப்போது தடுமாறுகிறார். அவரால் பாபர் அசாம் போல தொடர்ந்து அசத்த முடிவதில்லை. அதனால் தான் இம்முறை நடைபெறும் உலகக் கோப்பையில் இந்தியாவை மீண்டும் தோற்கடிப்பதற்கு பாகிஸ்தானுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று நான் சொல்கிறேன்.
என அவர் கூறினார்.