ஏற்கனவே இந்திய மண்ணில் இந்தியாவை...! சவால் விடும் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்
- இந்தியாவில் இந்தியாவை எதிர்த்து விளையாடும்போது நெருக்கடி இருக்கும்
- உலகக் கோப்பையாக இருந்தாலும், எங்களது அணுகுமுறையில் வேறுபாடு இருக்காது
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியா தோல்வியை சந்திக்காமல் உள்ளது. தென்ஆப்பிரிக்கா நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஆனால், நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற அணிகளை பந்தாடியது.
இந்தியாவை வருகிற 5-ந்தேதி தென்ஆப்பிரிக்கா எதிர்கொள்கிறது. இதில் வெற்றிபெறும் அணி புள்ளிகள் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும். மேலும், இந்த உலகக் கோப்பையில் இது மிகப்பெரிய போட்டியாக அமையும் என்றால் அது மிகையாகாது.
தென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங்கிற்கு வான் டெர் டுசன் முக்கிய பங்காற்றி வருகிறார். நேற்று நியூசிலாந்துக்கு எதிராக சதம் விளாசினார்.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து வான் டெர் டுசன் கூறியதாவது:-
உண்மையிலேயே, இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது மிகப்பெரிய போட்டியாக இருக்கும். அவர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அவர்கள் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய அணியாக திகழ்கின்றனர். சூப்பர் பவுலிங். அதுபோல் உண்மையிலேயே பேட்டிங் சூப்பர்.
ஆனால் நாம் செய்ய விரும்பும் விசயங்களைச் சிறப்பாகச் செய்தால், மிகவும் வலுவான நிலையில் இருப்போம் என்பதை அறிந்து அந்த விளையாட்டிற்குச் செல்வோம். நெருக்கடியின் கீழ் விளையாடுவது சவாலானது. அதைத்தான் செய்ய போகிறோம். ஆனால், இதற்கு முன் இந்தியாவில் இந்தியாவை எதிர்த்து விளையாடியுள்ளோம். அப்போது அவர்களை தோற்கடித்துள்ளோம்.
இதனடிப்படையில் இது உலகக் கோப்பையாக இருந்தாலும் கூட, மிகப்பெரிய வித்தியாசம் இல்லை. நாங்கள் மிகப்பெரிய அளவில் இதை எதிர்பார்க்கவில்லை. இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு உள்ளோம். நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம், அதை எப்படி விளையாட விரும்புகிறோம் என்பதில் கவனம் செலுத்துகிறோம்.
இவ்வாறு வான் டெர் டுசன் தெரிவித்தார்.