பர்மிங்காம் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பர்மிங்காம்:
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான பிராத்வெயிட் அரை சதமடித்து 61 ரன்னில் அவுட்டானார். ஜேசன் ஹோல்டர் 59 ரன்னும், ஜோஷ்வா டா சில்வா 49 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 75.1 ஓவரில் 282 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து சார்பில் கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், மார்க் வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணிக்கு ஆரம்பத்திலேயெ அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி 18 ரன்னிலும், பென் டக்கெட் 3 ரன்னிலும் அவுட்டாகினர். மார்க் வுட் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது. ஒல்லி போப் 6 ரன்னும், ஜோ ரூட் 2 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜேடன் சீல்ஸ் 2 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.