2வது டெஸ்ட் போட்டி- 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 229/5
- முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்கள் குவித்தது.
- 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 41 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்தது.
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர். ரோகித் சர்மா 80 ரன்னும், ஜெய்ஸ்வால் 57 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். முதல் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்திருந்தது.
விராட் கோலி 87 ரன்னும், ஜடேஜா 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. விராட் கோலி சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். ஜடேஜாவும் அரை சதமடித்தார். 500- வது சர்வதேச போட்டியில் விளையாடும் விராட் கோலி சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், யாஷவி ஜெய்ஷ்வால் 57 ரன்களும், அஷ்வின் 56 ரன்களும், இஷான் கிஷான் 25 ரன்களும், ஷூப்மன் கில் 10 ரன்களும், ராகானே 8 ரன்களும், ஜெய்தேவ் 7 ரன்களும் எடுத்தனர். சிராஜ் மற்றும் முகேஷ் குமார் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்கள் குவித்தது.
இதைதொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது. இந்த அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் மற்றும் சந்தர்பால் இருவரும் களமிறங்கினர். இதில், சந்தர்பால் 33 ரன்களில் அவுட்டானார். பின்னர், கிர்க் மெக்சென்சி களமிறங்கினார். பிராத்வெய்ட் 37 ரன்களுடனும், மெக்கென்சி 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
2ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 41 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில், 3ம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. களத்தில் இருந்த பிராத்வெய்ட் மற்றும் மெக்கென்சி ஆட்டத்தை தொடங்கினர். இதில், பிராத்வெய்ட் அரை சதம் அடித்து 75 ரன்கள் எடுத்தார். மெக்கென்சி 32 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
தொடர்ந்து, விளையாடிய பிளாக்வுட் 20 ரன்களும், ஜோஷ்வா டா சில்வா 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தற்போது, அலிக் 37 ரன்களுடனும், ஜேசன் ஹோல்டர் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 108 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.