5வது டி20 போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரை கைப்பற்றியது
- டாஸ் வென்று முதலில் ஆடிய இந்தியா 165 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
புளோரிடா:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 5-வது டி20 போட்டி ப்ரோவர்ட் கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் அரை சதம் கடந்தார். அவர் 45 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 61 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 27 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 4 விக்கெட்டும், அகீல் ஹொசைன், ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. கைல் மேயர்ஸ் 10 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய நிகோலஸ் பூரன், பிராண்டன் கிங்குடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.
பிராண்டன் கிங் அரை சதம் கடந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 12.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்திருந்தபோது மோசமான வானிலையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது பிராண்டன் கிங் 54 ரன்னும், நிகோலஸ் பூரன் 46 ரன்னும் எடுத்திருந்தனர்.
அரை மணி நேரத்துக்குப் பிறகு ஆட்டம் தொடர்ந்தது. 2வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்த நிலையில் நிகோலஸ் பூரன் 47 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 171 ரன்களை எடுத்து வென்றது. பிராண்டன் கிங் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரை 3-2 என கைப்பற்றியது.