கிரிக்கெட் (Cricket)

பெண்கள் பிரீமியர் லீக்: மந்தனாவின் அதிரடியால் ஆர்சிபி அணிக்கு 3-வது வெற்றி

Published On 2024-03-05 03:08 GMT   |   Update On 2024-03-05 03:08 GMT
  • ஸ்மிரிதி மந்தனா 50 பந்தில் 80 ரன்கள் விளாசினார்.
  • அலிசா ஹீல் 38 பந்தில் 55 ரன்கள் விளாசிய போதிலும் உ.பி. வாரியர்ஸ் அணியால் வெற்றி பெற முடியவில்லை.

5 அணிகள் இடையிலான 2-வது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - உ.பி. வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 3 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்தது. உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த கேப்டன் ஸ்மிர்தி மந்தனா 80 ரன்கள் (50 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். எலிஸ் பெர்ரியும் அரைசதம் (58 ரன், 4 பவுண்டரி, 4 சிக்சர்) அடித்தார்.

அடுத்து கடின இலக்கை நோக்கி ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணியில் கேப்டன் அலிசா ஹீலி களத்தில் நின்றது வரை அவர்களுக்கு நம்பிக்கை காணப்பட்டது. ஹீலி 55 ரன்னில் (38 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறியதும் ஆட்டம் பெங்களூரு பக்கம் திரும்பியது. எதிர்பார்க்கப்பட்ட சமாரி அட்டப்பட்டு (8 ரன்), கிரேஸ் ஹாரிஸ் (5 ரன்) ஏமாற்றம் அளித்தனர்.

ஸ்மிரிதி மந்தனா

20 ஓவர்களில் உ.பி. வாரியர்ஸ் அணி 8 விக்கெட்டுக்கு 175 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. 5-வது லீக்கில் ஆடிய பெங்களூருவுக்கு இது 3-வது வெற்றியாகும். உ.பி. வாரியர்ஸ் அணியின் 3-வது தோல்வி இதுவாகும்.

இத்துடன் பெங்களூரு சுற்று நிறைவடைந்தது. அடுத்தகட்ட போட்டிகள் டெல்லியில் நடக்கிறது. டெல்லியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஏற்கனவே தொடக்க லீக்கில் மும்பையிடம் அடைந்த தோல்விக்கு டெல்லி பழிதீர்க்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News