மகளிர் ஆசிய கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் இலங்கை
- பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இலங்கை முன்னேறியது
- இலங்கை அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தம்புல்லா:
9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
முதல் அரையிறுதியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில், 2-வது அரையிறுதிப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில் குல் பெரோசா 25 ரன்னில் அவுட்டானார். ஓரளவு தாக்குப் பிடித்த முனீபா அலி 37 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் நிதா தர் 23 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து, 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான விஸ்மி குணரத்னே டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சமாரி அட்டப்பட்டு 63 ரன்கள் விளாசினார். கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19.5 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் அடித்து இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது.
பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்த இலங்கை அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி முன்னேறியது.
நாளை நடைபெறும் மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதுகின்றன.