கிரிக்கெட் (Cricket)

277 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார் தமிழக வீரர் ஜெகதீசன்

Published On 2022-11-21 09:51 GMT   |   Update On 2022-11-21 09:51 GMT
  • இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா சாதனையை ஜெகதீசன் முறியடித்தார்.
  • இறுதியில் தமிழக அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 506 ரன்கள் குவித்தது.

இந்தியாவின் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே 2022 தொடரின் லீக் சுற்று உச்ச கட்டத்தை எட்டியுள்ளன. அதில் எலைட் சி பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழகம் முதல் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்த நிலையில் இன்று நடைபெற்ற 100வது லீக் போட்டியில் அருணாச்சல பிரதேசத்தை எதிர்கொண்டது.

பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சல பிரதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய தமிழக அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் நாராயன் ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலிருந்தே அருணாச்சல பிரதேச பவுலர்களுக்கு கொஞ்சமும் கருணை காட்டாமல் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்டனர். பவர் பிளே முடியும் போதே 100 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தது இந்த ஜோடி.

எதிரணி பவுலர்களை கதற கதற அடித்த இந்த ஜோடியில் ஜெகதீசன் முதலாவதாக சதமடித்தார். அவருக்கு போட்டியாக சாய் சுதர்சன் சதமடிக்க அவரையும் மிஞ்சிய பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜெகதீசன் இரட்டை சதமடித்தும் நிற்காமல் தொடர்ந்து அதிரடியாக ஆடினார்.

மொத்தம் 38.3 ஓவர்கள் வரை சிம்ம சொப்பனமாக நின்ற இந்த ஜோடி 416 ரன்கள் குவித்து மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தது. சாய் சுதர்சன் 154 (102) ரன்களில் ஆட்டமிழந்த போது பிரிந்தது. சில ஓவர்களில் 25 பவுண்டரி 15 மெகா சிக்சருடன் 277 (141) ரன்களை குவித்த ஜெகதீசனும் ஒரு வழியாக ஆட்டமிழந்தார்.

இறுதியில் தமிழக அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 506 ரன்கள் குவித்தது. இப்போட்டியில் 277 ரன்கள் குவித்த தமிழக வீரர் ஜெகதீசன் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் இரட்டை சதமடித்த முதல் தமிழக வீரர் மற்றும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த தமிழக வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

இதற்கு முன் கடந்த 2011ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் 154 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும். அத்துடன் இத்தொடரில் ஏற்கனவே 4 சதங்களை அடித்திருந்த அவர் இப்போட்டியில் அடித்த சதத்தையும் சேர்த்து 5 சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற விராட் கோலி உள்ளிட்ட 4 இந்திய வீரர்களின் சாதனையை தகர்த்த அவர் புதிய சாதனை படைத்தார்.

அந்த பட்டியல்:

1. நாராயண் ஜெகதீசன் : 5* (2022)

2. விராட் கோலி : 4 (2008)

3. பிரிதிவி ஷா : 4 (2021)

4. ருதுரா கைக்வாட் : 4 (2021)

5. தேவ்தூத் படிக்கல் : 4 (2021)

அத்துடன் விஜய் ஹசாரே கோப்பையில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள் பறக்க விட்ட வீரர் என்ற வரலாற்றையும் ஜெகதீசன் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. நாராயன் ஜெகதீசன் : 15, அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிராக, 2022*

2. ஜெய்ஸ்வால் : 12, ஜார்கண்டுக்கு எதிராக, 2019

கடைசி 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக சதமடித்துள்ள அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ந்து 5 போட்டிகளில் 5 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் இலங்கையின் குமார் சங்ககாரா (2105), தென் ஆப்பிரிக்காவின் அல்வீரோ பீட்டர்ஸன் (2014/15), இந்தியாவின் தேவதூத் படிக்கல் (2021) ஆகியோர் அதிகபட்சமாக 4 போட்டிகளில் 4 தொடர்ச்சியான சதங்களை அடித்ததே முந்தைய சாதனையாகும்.

அது போக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற புதிய உலக சாதனையும் அவர் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. நாராயன் ஜெகதீசன் : 277*, அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிராக,

2022* 2. அலி ப்ரவுன் : 268, கிளாமோர்கன் அணிக்கு எதிராக, 2002

3. ரோஹித் சர்மா : 264, இலங்கைக்கு எதிராக, 2014

4. டார்சி ஷார்ட் : 257, குயின்ஸ்லாந்துக்கு எதிராக, 2018

மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதமடித்த பேட்ஸ்மேன் என்ற ஆஸ்திரேலியாவின் டிராவீஸ் ஹெட் உலக சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.

அந்த பட்டியல்: 1. நாராயன் ஜெகதீசன் : 114 பந்துகள், அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிராக, 2022*

2. டிராவிஸ் ஹெட் : 114 பந்துகள், குயின்ஸ்லாந்துக்கு எதிராக, 2021

Tags:    

Similar News