கிரிக்கெட் (Cricket)

குல்தீப்புக்கு எதிராக உங்களிடம் என்ன திட்டம் இருந்தது? பாகிஸ்தான் இயக்குனர் மீது வாசிம் அக்ரம் கடும் பாய்ச்சல்

Published On 2023-10-16 07:15 GMT   |   Update On 2023-10-16 07:15 GMT
  • இந்தப் போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தியது போல இல்லை.
  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பி.சி.சி.ஐ.) நடத்தியது போல் இருந்தது.

 புதுடெல்லி:

உலக கோப்பை போட்டியில் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

பாகிஸ்தான் போராடாமலே இந்தியாவிடம் எளிதில் சரண் அடைந்தது. இதனால் இந்த ஆட்டம் ஒரு பக்கமாகவே இருந்தது.

பாகிஸ்தான் அணியின் இயக்குனரும், தென்ஆப்பிக்காவை சேர்ந்தவருமான மிக்கி ஆர்தர் இந்த தோல்வி குறித்து விளக்கினார். அவர் கூறியதாவது:-

இந்தப் போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தியது போல இல்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பி.சி.சி.ஐ.) நடத்தியது போல் இருந்தது. மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் இருந்தனர். பாகிஸ்தானை ஊக்கப்படுத்தும் எந்த செயல்களும் களத்தில் நிகழ அனுமதிக்கப்படவில்லை.

இதுவும் ஒரு காரணம்தான். இதை நான் சாக்காக கூறப்போவது இல்லை என்று தெரிவித்து இருந்தார்.

மிக்கி ஆர்தரின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முன்னாள் கேப்டனும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் அவரை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக வாசிம்அக்ரம் கூறியதாவது:-

இந்தியாவிடம் மோசமாக தோற்றதற்கு பழி போட்டு தப்பிக்க வேண்டாம் என்று மிக்கிஆர்தரை கேட்டுக் கொள்கிறேன். குல்தீப் யாதவுக்கு எதிராக உங்களிடம் என்ன திட்டம் இருந்தது? என்று எங்களிடம் சொல்லுங்கள். அதைத்தான் நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

இந்த தோல்வியில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள இப்படி பேசுகிறீர்களா? துரதிருஷ்டவசமாக உங்களால் இதில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News