ஆன்மிக களஞ்சியம்

ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த மூகாம்பிகா சிலை

Published On 2024-10-17 10:04 GMT   |   Update On 2024-10-17 10:04 GMT
  • அழகும், அமைதியும் கொண்ட இடத்தில் சாந்தமான கோலத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் மூகாம்பிகா.
  • மூன்று கண்கள் கொண்டவளாக காட்சியளிக்கும் அம்பாள் காணக்கிடைக்காத உருவம் அது.

ஆதிசங்கரர் 788ல் அன்றைய தமிழகத்தின் ஒரு பகுதியாகவும், இன்று கேரளா பகுதியாகவும் உள்ள காலடி என்ற இடத்தில் சிவகுரு ஆயாம்பாள் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார்.

கோவிந்த பாகவதரின் சீடராக தன் ஆன்மீக பயணத்தை தொடங்கினார்.

உபநீஷங்கள், பிரம்மசூத்திரம், அத்வைதம் என கற்று தேர்ந்த ஞானியவர்.

இந்து மதத்தை மென்மேலும் உயிர்பிக்க வந்தவர். பகவத்கீதை, விஷ்ணு அவதாரம் போன்றவற்றிற்கு விளக்கவுரை எழுதிவைத்தவர்.

இந்திய துணை கண்டம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு இந்து மதத்தை எழுச்சி பெற வைத்தவர்.

கிழக்கே பூரி, மேற்கே துவாரகா, வடக்கே பத்ரிநாத், தெற்கே சிருங்கேரி என நான்கு இடங்களில் அத்வைத மடங்களை நிறுவி தன் சீடர்களிடம் ஒப்படைத்தார்.

அவர் பயணம் மேற்கொள்ளும் போது கர்நாடகாவின் கொடச்சேரி மலையின் மீது தியானம் மேற்கொள்கிறார்.

தியானத்தின் பலனாய் அம்பாள் அருளாசி வழங்க அவர் முன் தோன்றும்போது அம்பாளை தினம் தினம் வணங்க வேண்டும்.

தங்களது உருவத்தை நான் கேரளா காலடியில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என விரும்புகிறேன் என கேட்கிறார்.

அம்பாளுக்கே இருப்பிடம் விட்டு போக மனசில்லை. இருந்தும் பக்தன் கேட்டுவிட்டான்.

கேட்டதை வழங்குவதே அம்பாளின் நிலை. அதனால் மூகாம்பிகையம்மன் பதிலுக்கு அவரிடம் ஒரு வாக்குறுதி பெறுகிறார்.

அதாவது, நீங்கள் என் உருவத்தை கொண்டு செல்லுங்கள்.

ஆனால் நீங்கள் சென்று சேரும் இடம் வரை திரும்பி பார்க்ககூடாது. அப்படி திரும்பினால் அந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்துவிட வேண்டும் என்கிறார்.

ஆதிசங்கரரும் அதை ஏற்று அம்பாளின் உருவம் கொண்ட சிலையுடன் கொடச்சேரி மலையில் இருந்து அம்பாளை கைகளால் தாங்கிக்கொண்டு பக்தியுடன் இறங்கி வருகிறார்.

மலையின் அடிவாரம் வந்தபோது அம்பாள் தனது கொலுசை அசைக்க அதில் வந்த சத்தத்தை கேட்டு ஆதிசங்கரர் திரும்பி பார்க்கிறார்.

திரும்பி பார்த்ததால் அம்பாளுக்கு தந்த வாக்குப்படி அந்த இடத்திலேயே அம்பாளை பிரதிஷ்டை செய்கிறார். அந்த இடம் கொல்லப்புறா என்கிற கொல்லூராகும்.

ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்த சிலையே தற்போதும் உள்ளது.

அழகும், அமைதியும் கொண்ட இடத்தில் சாந்தமான கோலத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் மூகாம்பிகா.

மூன்று கண்கள் கொண்டவளாக காட்சியளிக்கும் அம்பாள் காணக்கிடைக்காத உருவம் அது.

பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க தூண்டும் அன்பு கலந்த சாந்த முகமாக காட்சியளிக்கிறாள்.

Similar News