ஆன்மிக களஞ்சியம்

கழுகுகள் வரலாறு-சம்புகுத்தன், மாகுத்தன்

Published On 2024-08-21 11:52 GMT   |   Update On 2024-08-21 11:52 GMT
  • அது கேட்ட இளையவன் ‘‘சக்தியே பெரிது’’ என்று கூறினான். இதனால், இவர்களுக்குள் ஒழியாத பகையுண்டாகியது.
  • சிவபெருமான் கூறியும் இருவரும் ஒருவரோடொருவர் பொறுமை இழந்து சத்தியே பெரிதென்றும் சிவமே பெரிதென்றும் வாதிட்டனர்.

துவாபரயுகத்தில், பார்வதி தேவியாருக்கு ஒருபாகம் தந்தருளிய பரமசிவம் வீற்றிருந்தருளுகின்ற உருத்திரகோடியில் சம்புகுத்தன், மாகுத்தன் எனும் பெயரினையுடைய இருவர் நெடுங்காலம் தவஞ்செய்து கொண்டிருந்தார்கள். இரண்டு உடலுக்கு ஓருயிர்போல் இருந்த இவர்களில் மூத்தவன் ''சிவமே பெரிது'' என்றான்.

அது கேட்ட இளையவன் ''சக்தியே பெரிது'' என்று கூறினான். இதனால், இவர்களுக்குள் ஒழியாத பகையுண்டாகியது.

சிவபெருமான் கூறியும் இருவரும் ஒருவரோடொருவர் பொறுமை இழந்து சத்தியே பெரிதென்றும் சிவமே பெரிதென்றும் வாதிட்டனர்.

அவ்விருவரின் நிலையைக் கண்டு பரமசிவமும் பராசத்தியும் ஒருவர் முகத்தை யருவர் பார்த்துப் புன்சிரிப்புக் கொண்டனர்.

ஒளியும் மாணிக்கமும், கடலும் அலையும், அமுதமும் சுவையும், எள்ளும் எண்ணெய்யும், பொன்னும் அணியும் போல் பிரியாமலிருக்கிற தங்களைப் பிரித்துரைத்த அவர்களை சத்தி பெரிதென்றவனைச் சத்தியும், சிவம் பெரிதென்றவனைச் சிவமும் நோக்கி ''நீங்கள் இருவரும் கழுகுகளாய்ச் சுழலக் கடவீர்கள்'' என்று சபித்தார்கள்.

அவர்கள் இருவரும் அப்பொழுதே கழுகுகளாகி நடுநடுங்கி ''அய்யனே! எங்கள் குற்றங்களைப் பொறுத்தருளி, இக்கழுகுருவம் நீங்கும் இடமும் காலமும் கட்டளையிட்டருள வேண்டும்'' என்று விண்ணப்பம் செய்ய ''இந்த யுகம் நீங்கும் போது அந்த வரம் உங்களுக்குத் தந்தருளுகிறோம். அப்படித் தருகிறவரைக்கும் தவத்தையும் பூசையையும் நீங்கள் இவ்வேதகிரித் தலத்தில் செய்யுங்கள்'' என்று கட்டளையிட்டருளினர்.

அவ்விருவரும் அவ்வாறே தவத்தையும் பூசையையும் அன்புடன் செய்து பழைய உருவம் பெற்றுய்ந்தார்கள்.

Tags:    

Similar News