கோவில்கள்

பத்ராசலம் ஸ்ரீ சீதா ராமசந்திரமூர்த்தி திருக்கோவில்- தெலுங்கானா

Published On 2023-06-20 06:35 GMT   |   Update On 2023-06-20 06:35 GMT
  • பத்ராசல ராமர் ஆலயம் மலைமேல் அமைந்துள்ளது.
  • மலை அடிவாரத்தில் கோதாவரி நதி தவழ்கிறது.

தெலுங்கானாவில் கொத்தகூடம் மாவட்டம் பத்ராத்ரியில் பத்ராசலம் அமைந்துள்ளது. நம்மம் சாலையிலிருந்து பத்ராசலம் செல்ல ரயில்வசதி உண்டு. பத்ராசலம் சாலையிலிருந்து 15 நிமிடத்திற்கு ஒருமுறை பஸ் செல்கிறது. பத்ராசலம் மலைமீது ஸ்ரீ சீதா ராமசந்திரமூர்த்தி ஆலயம் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் கோதாவரி நதி தவழ்கிறது. ராமாயணத்தில் நடந்த சம்பவங்கள் இத்தலத்தை ஒட்டி அமைந்ததால் உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர்.

மேரு-மேனகாவின் புதல்வரான பத்ரா, ராமபிரான் அருளைப் பெற தண்டகாரண்யக் காட்டில் கோதாவரி நதிக்கரையில் கடுந்தவம் செய்தார். பின் ராமனை பத்ரகிரி மலைமேல் அமரக் கேட்டபோது, ஸ்ரீராமன், தான் சீதையைத் தேடிச் செல்வதால், சீதையைக் கண்டுபிடித்து இராவணனை வதம் செய்தபிறகு உன் விருப்பம் நிறைவேறும் என்றார். ஆனால், ராமனால் வாக்குத் தந்தபடி ராமாவதாரத்தில் அதனை நிறைவேற்ற இயலாததால், பத்ரமுனி யாகத்தைக் மிகத் தீவிரமாகச் செய்ய ஆரம்பித்தார். அதன்பின் மஹாவிஷ்ணு வைகுந்த இராமனாக, வலது கையில், சங்கு, இடது கையில் சக்ரம் ஏந்தி, சீதை, லட்சுமணருடன் விரைந்து வந்து காட்சி தந்தார். ராமர் தனது வனவாசத்தின்போது சீதை, லட்சுமணனுடன் இங்கு தங்கியதாகவும், பத்ரமுனியின் வேண்டுகோளுக்கிணங்கி பத்ரமலையின் உச்சியில் அமர்ந்து காட்சி தந்ததால் இத்தலம் 'பத்ராசலம்' எனப்பட்டது.

17ம் நூற்றாண்டில் வாழ்ந்த போகலா தம்மக்கா என்ற ராமர் பக்தை, பத்ரரெட்டி பாலம் என்னும் இடத்தில் வாழ்ந்து வந்தாள். ராமர், லட்சுமணர், சீதை உருவச் சிலைகளைக் கண்டாள். ஒருநாள் ராமர், அவள் கனவில் தோன்றி, "முனிவர்களும், யோகிகளும் பத்ரகிரியில் எனது உருவச் சிலையை பூஜித்தார்கள். அதைத் தேடியெடுத்துப் பூஜை செய்" எனச் சொல்ல, அதன்படி மறுநாள் அவள் சிலையைத் தேடிச் செல்லும்போது எறும்புமலை என்னுமிடத்தில் உருவச் சிலைகள் மறைந்து இருந்ததைக் கண்டு, கோதாவரி நீரை, குடங்களில் எடுத்து, அதன் மேல் ஊற்றியதும் சிலைகள் கண்ணுக்குத் தெரிந்தன. தினசரி இப்படிச் செய்து பக்கத்தில் இருந்த மரங்களிலிருந்து பழங்களைப் பறித்து நைவேத்யம் செய்துவந்து, பின்னர் உள்ளூர் கிராமத்தினர் உதவியோடு மண்டபம் கட்டி வழிபட ஆரம்பித்தனர். ஸ்ரீராமர் சிறிதுகாலத்திற்குப் பின் "எனது பக்தன் இவ்விடத்தில் கோவிலைக் கட்டுவான்" என தம்மக்கா தேவியிடம் தெரிவித்தார். அந்த பக்தர்தான் பக்த ராமதாசர்.

17வது நூற்றாண்டில் காஞ்சல்லா கோபண்ணா என்ற தாசில்தாரால் கோவில் கட்டப்பட்டது. கிராமத்து மக்கள் கோவில் கட்டப் பணம் வழங்கினார்கள். பணம் போதவில்லை. அதனால் நிஜாமின் அனுமதியின்றி கஜானாவிலிருந்து பணத்தை எடுத்து அவர் உபயோகித்தார். செய்தி அறிந்த நிஜாம் சினமுற்று அவரைச் சிறையில் அடைத்துவிட்டார். கோபண்ணா மனந்தளராமல் ராமபிரானைப் பிரார்த்தித்தார். நிஜாம் ஆலயப் பொறுப்பை ஏற்றார். தனது பக்தனுக்காக ராம, லட்சுமணர், ராமோஜி, லட்சுமணாஜி எனக் கூறிக் கொண்டு கோபண்ணாவின் விடுதலைக்காக 6 லட்சம் மோகராக்களை நிஜாமிடம் கட்டினார்கள். கட்டியதற்காக வாங்கிய ரசீதை, கோபண்ணா அறியாமல், அவரது தலையணைக்குக் கீழே வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

காலையில் எழுந்த நிஜாம் தானிஷா, இரவில் வந்து பணம் செலுத்தியது ராம, லட்சுமணர்கள் தான் என்பதை இறையருளால் உணர்ந்து கொண்டார். கோபண்ணாவை விடுதலை செய்தார். ராம, லட்சுமணர் அளித்த பணத்தில் இரண்டு மோகராக்களை மட்டும் அடையாளமாக எடுத்துக்கொண்டார். அந்தக் காசுகள் இன்றும் ஸ்ரீசீதா ராமச்சந்திர ஸ்வாமி தேவஸ்தானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. கோபண்ணா தனது சிறைத் தண்டனையின்போது இடைவிடாமல் ராமனைத் துதித்துப் பாடிய 'தாசரதி சதகம்' என்னும் கீர்த்தனைகள் இன்றளவும் இசைக்கப்பட்டு வருகின்றன. பக்த ராமதாஸ் பாடல்களால் ஈர்க்கப்பட்டு, சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் நேரில் பத்ராசல ராமரைத் தரிசித்துச் சில பாடல்களை இயற்றியுள்ளார்.

பத்ராசல ராமர் ஆலயம் மலைமேல் அமைந்துள்ளது. மூலவர் ஸ்ரீ சீதாராமசுவாமி. ராமரின் இடதுபக்கம் மடியில் சீதை அமர்ந்த வண்ணம் ராமனுடனும் லட்சுமணனுடன் தெய்வீக அழகுடன் காட்சி அளிப்பதை பக்தர்கள் நேரில் தரிசிக்கும்போது உணரமுடியும். மண்டபத்தின் நான்கு தூண்களிலும் அஷ்டலக்ஷ்மி, 18 விதத் தோற்றங்களில் சிவன், தசாவதாரம் மற்றும் பன்னிரு ஆழ்வார்கள் சிலா வடிவங்களைக் காணலாம். கர்ப்பக்கிரகத்தின் மேல் மூன்றடுக்கு விமானம், அதன் மறுபக்கம் மஹாவிஷ்ணுவின் 48 விதத் தோற்றங்கள், கருடன், சிம்மம், ஸோமாஸ்கந்தர், தக்ஷிணாமூர்த்தி அழகிய சிலைகளைக் காணலாம். விமானத்தின் சிகரம் ஒரே சலவைக்கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தூண்களில் சம்க்ஷிப்த ராமாயணம், தாசரதி சதகம் அதை எழுதிய ராமதாசர் சிலையின் எதிரில் பொறிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமி உற்சவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சீதாராம கல்யாண தினத்தன்று உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்கின்றனர். பக்த ராமதாசர் சிறந்த பாடகர் ஆனதால் 'வாக்கேயக்காரர் உற்சவம்' மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி, தெப்போத்ஸவம், தசாவதார உற்சவம், அத்யயன உற்சவம் எனப் பல உற்சவங்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

செல்லும் வழி

பத்ராச்சலம் நகரமானது ஐதராபாத்தில் இருந்து கிழக்கே 325 கிலோ மீட்டர் தூரத்திலும் கம்பம் நகரத்தில் இருந்து 120 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

முகவரி:

பத்ராச்சலம் கோவில் சாலை,

பத்ராசலம்,

தெலுங்கானா - 507111.

Tags:    

Similar News