500 ஆண்டு பழமையான காங்கேயநல்லூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில்
- மூலவரின் திருவுருவம் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டது.
- இது குழந்தை வரம் அருளும் பிரார்த்தனை தலமாகும்.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது தொன்மையான வழக்கு. ஆனால், நதிக்கரையிலும் முருகன் கோயில் அமைந்திருக்கிறது. வேலூர் அருகே வேகவதி என்றழைக்கப்படும் பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்தான் அது. இக்கோயில் 500 ஆண்டு பழமையானது. திருத்தணியில் வள்ளி-தெய்வானையுடன் காட்சி தரும் முருகனின் அதே தோற்றத்தை ரத்தினகிரியிலும், காங்கேயநல்லூரிலும் காணலாம். மூலவரின் திருவுருவம் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டது. விஜயநகர பேரரசு காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரத்தை அடுத்து அழகிய கொடி மரம். அதையடுத்து அர்த்த மண்டபம். கருவறையில் மூலவர் வள்ளிதெய்வானையுடன் அருளாட்சி செய்ய, சுற்றுப் பிரகாரங்களில் விநாயகர், சிவன், அருணகிரிநாதர், தண்டபாணி மற்றும் ஆறுமுகசாமி ஆகியோர் கொலு வீற்றிருக்கின்றனர்.
1929ம் ஆண்டு கற்காரத்தின் மீது ராஜகோபுரத்தை நிர்மாணிக்கும் திருப்பணியை மேற்கொள்ள, திருமுருக கிருபானந்தவாரியாரின் தந்தை மல்லையதாஸ் பாகவதர் முன்வந்தார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் 23ம்நாள் மாலை 4 மணியளவில் ராஜகோபுரத்தின் 5வது நிலையில் பணி செய்து கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு மல்லையதாஸ் பாகவதரின் மற்றொரு மகனான சிறுவன் ஸ்ரீசைலவாசன் உணவு எடுத்து சென்றான்.
பின்னர் அங்கிருந்து இறங்க முயற்சித்தபோது தவறி 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தான். மூர்ச்சையின்றி கிடந்த மகனை பார்த்து அதிர்ச்சியடைந்த மல்லையதாஸ், கோயிலின் கருவறை நோக்கி 'முருகா' என்று மனமுருகி வேண்டியபடி ஓடினார். பின்னர் மகன் அருகில் சென்று தனது குருநாதர் உபதேசித்த சடக்கர மந்திரத்தை ஓதினார். அங்கு கூடிய பொதுமக்களும் மூர்ச்சையின்றி கிடந்த ஸ்ரீசைலவாசனின் நெற்றியில் விபூதியை பூசி சிறுவனை காக்கும்படி முருகனை நெஞ்சுருக வேண்டினர். சிறிது நேரத்தில் குழந்தை எந்தச் சிறு கீறலுமின்றி பெற்றோரை பார்த்து சிரித்தபடி எழுந்தான். முருகப்பெருமானின் இந்த மகிமையை கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அந்த சிறுவன் திருமுருக கிருபானந்தவாரியாரின் சகோதரர் ஆவார்.
இக்கோயிலின் எதிரிலேயே முருகனின் புகழை திக்கெட்டும் பரப்பிய திருமுருக கிருபானந்தவாரியாரின் பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு 'ஞானத்திருவளாகமாக காட்சியளிக்கிறது. பிரார்த்தனை தலமான இந்தக் கோயிலுக்கு குழந்தை வரம் வேண்டி ஆண்டுதோறும் ஆடி மாத பரணி, கிருத்திகை மற்றும் தை கிருத்திகை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு குழந்தை செல்வம் கிடைத்தபிறகு மீண்டும் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இக்கோயிலுக்கு வேலூரில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் வேலூர்காட்பாடி செல்லும் அனைத்து பஸ்களிலும் செல்லலாம்.