கோவில்கள்

திருமண வரம், குழந்தைப்பேறு அருளும் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில்

Published On 2023-04-28 05:10 GMT   |   Update On 2023-04-28 05:10 GMT
  • இந்த கோவில் சுமார் 2½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
  • 2½ உயரம் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் வடபுறமாக சற்றே சாய்ந்தாற்போலக் காட்சியளிக்கிறது.

கரூர் பஸ்நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. காமதேனு வழிபட்டதால் 'பசுபதீஸ்வரர்' என்றும், 'ஆநிலையப்பர்' என்றும் அழைக்கப்படுகிறார். மூலவர் ஒரு சுயம்பு லிங்கம் ஆகும். சுமார் 2½ உயரம் உள்ள இந்த சிவலிங்கம் வடபுறமாக சற்றே சாய்ந்தாற்போலக் காட்சியளிக்கிறது. மூலவரின் இடதுபக்கத்தில் அலங்காரவல்லி, சவுந்தரநாயகி சன்னதிகள் உள்ளன.

நூறுகால் மண்டபம்

இந்த கோவில் சுமார் 2½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவில் ராஜகோபுரம் 7 நிலைகளையும், 7 கலசங்களையும் கொண்டுள்ளது. முன் கோபுரம் 120 அடி உயரம் உள்ளது. கோவிலுக்குள் 2 பிரகாரங்கள் உண்டு. கோவில் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். தல விருட்சம் வஞ்சி மரம் ஆகும்.

கோவிலில் உள்ள நூறுகால் மண்டபம் காணவேண்டிய ஒன்றாகும். கோபுரத்தில் திருவிளையாடல் புராணம், தசாவதாரம் ஆகியவை சுதைச்சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. உட்கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. இரு கோபுரங்களுக்கும் இடையே புகழ்ச்சோழர் மண்டபம் உள்ளது. புகழ்ச்சோழர் 63 நாயன்மார்களில் ஒருவர். இவர் கருவூர் பகுதியை ஆண்ட மன்னராவார். 63 நாயன்மார்களில் ஒருவரான எறிபத்த நாயனார் பிறந்த தலம் என்ற பெருமையும் கரூருக்கு உண்டு.

எறிபத்த நாயனார்

கல்யாண பசுபதீஸ்வரருக்கு சிவகாமி ஆண்டார் முனிவர் சாமிக்கு சாற்ற பூக்கள் கொண்டு வரும் போது புகழ் சோழர் அரசனுக்கு சொந்தமான பட்டத்து யானை, முனிவர் கையில் இருந்த பூக்குடலையை தட்டி விட்டது. இதனை கண்ட அங்கிருந்த எறிபத்த நாயனார், தன் கையில் இருந்த வாளால் பட்டத்து யானையின் தும்பிக்கையை வெட்டினார். மேலும் யானையுடன் வந்த பாகனையும், அரச வீரர்களையும், யானையையும் வெட்டி கொன்றார். இதனை அறிந்த புகழ் சோழ அரசர் தனது படையுடன் வந்து நடந்த நிகழ்வை கேட்டு இச்செயலுக்கு காரணமாக அமைந்த தன்னையும் வெட்டி கொன்றுவிடுமாறு எறிபத்த நாயனாரிடம் வேண்டினார். அப்போது சிவபெருமான் உமா மகேஸ்வரியுடன் தோன்றி அனைவருக்கும் காட்சியளித்தார். மேலும் இறந்தவர்களை உயிர்பித்து அருள் செய்தார்.

பிரம்மனின் கர்வம் நீங்கியது

இதேபோல் பிரம்மனுக்கு தன் படைப்பு திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவை கொண்டு திருவிளையாடல் நடத்தினார். அதன்படி காமதேனு, நாரதர் கூறியபடி பூமிக்கு வந்து, வஞ்சி வனமாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தது. அப்போது, "புற்று ஒன்றுக்குள் பாதாளத்தில் ஆதிலிங்கம் இருக்கும். அதை வழிபடு" என்று அசரீரி கேட்டது. அதன்படி காமதேனுவும் தன் மடியிலிருந்த பாலை சொரிந்து தினமும் வழிபாடு செய்தது. ஒரு நாள் இறைவன் திருமுடியில் காமதேனுவின் குளம்பு பட்டுவிடவே, லிங்கத்தில் ரத்தம் வந்தது. இதனால் காமதேனு மனம் வருந்தியது.

இதனைக்கண்ட இறைவன், காமதேனுவிடம், "நீ என்னை வழிபட்ட காரணத்தினால் இந்த உலகம் என்னை பசுபதிநாதர் என்ற பெயரால் அழைக்கும். அத்துடன் நீயும் பிரம்மனைப்போல் படைப்பு தொழில் செய்வாய்", என்று வரம் தந்தார். அதன்படி காமதேனுவும் படைப்பு தொழில் செய்ய பிரம்மன் கர்வம் நீங்கினான். இதையடுத்து இறைவன் படைப்பு தொழிலை பிரம்மனிடம் ஒப்படைத்து விட்டு காமதேனுவை சொர்க்கத்துக்கு அழைத்து கொண்டார் என்று இத்தல வரலாறு கூறுகிறது.

கருவூர் சித்தர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோவிலில் திருஞானசம்பந்தர், சித்தர் கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். கந்த புராண காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் முசுகுந்த சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டபெருமை பெற்றது இந்த கோவில். 18 சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் இக்கோவிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமானதால் அவருக்கு தெற்குப் பிரகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கி கருவூர் சித்தர் சந்நிதி உள்ளது. பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் சூரியனின் ஒளி லிங்கத்தின் மீது படும்படியாக கோவில் அமைப்பு இருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.

கல்யாண பசுபதீஸ்வரரை வணங்கினால் மனத்துயரம் நீங்கும், திருமண வரம், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் கல்யாண பசுபதீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், எண்ணெய் அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். சில பக்தர்கள் தாலி, ஆபரணங்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

-பாரதி, கரூர்.

Tags:    

Similar News