கோவில்கள்

குலசை முத்தாரம்மன் கோவில்

Published On 2022-10-01 06:26 GMT   |   Update On 2022-10-01 06:26 GMT
  • அம்மை நோய் கண்டவர்கள் இங்கு வந்து வழிப்பட்டு குணமடைவது வழக்கமாக உள்ளது.
  • நவராத்திரி கொண்டாட்டமே குலசேகரப்பட்டினத்தின் மிகப்பெரும் திருவிழாவாகும்.

தூத்துக்குடிமாவட்டத்தில் உள்ள அழகிய கடற்கரை கிராமமான குலசை என அழைக்கப்படும் குலசேகரப்பட்டினம் திருநெல்வேலியில் இருந்து 68 கி.மீ. தொலைவிலும் திருச்செந்தூரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தப்படியாக நவராத்திரி பண்டிகை படு விமரிசையாக இங்கு கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் மட்டுமின்றி 365 நாட்களும் இங்கே கொண்டாடப்படும். முத்தாரம்மன் வழிபாடு சிறப்பானது.

கிராமங்களில் அம்மைப் போடுவதை முத்து போடுவதாக கூறுவார்கள். அப்படி போட்டிருக்கும் 'முத்தை' (அம்மை நோயை) 'ஆற்ற'க்கூடிய அம்மன் என்பதால் 'முத்து ஆற்று அம்மன்' என்பது நாளடைவில் 'முத்தாரம்மன்' என கூறலாயிற்று. அதனால்அம்மை நோய் கண்டவர்கள் இங்கு வந்து வழிப்பட்டு குணமடைவது வழக்கமாக உள்ளது.

கிட்டதட்ட 500 ஆண்டுகளுக்கு முன் மைலாடி என்னும் ஊரில் ஆசாரி ஒருவரின் கனவில் தோன்றிய அம்மன் தனக்கு சிலை செய்து அதை குலசையிலிருந்து வரும் அர்ச்சகரிடம் கொடுத்தனுப்புமாறு கூறினார். அதேபோல அர்ச்சகரின் கனவிலும் தோன்றி ஆசாரி தரும் சிலையை கொண்டு வந்து வைத்து வழிபடுமாறு கூறினார். அம்மன் கனவில் சொன்னது படியே அனைத்தும் நடந்தது. தன் உருவத்தை தானே வடிவமைத்துக் கொண்ட அம்பாளுக்கு இங்கே கோயிலமைத்து வழிபாட்டு பூஜைகள் நடந்து வருகிறது.

பொதுவாக எல்லா கோவில்களிலும் சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கும். ஆனால் இக்கோவிலில் சக்தி மயமாக சிவனும், சிவமயமாக சக்தி யும் இருந்து அருள்பாலிக்கின்றனர். குலசை முத்தாரம்மன் கோவிலில் எங்கும் காண முடியாத அதிசயமாக இங்கு மூலவர் ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பாள் முத்தாரம்மனும் சுயம்புவாக தோன்றி ஒரே விக்கிரகமாக வடக்கு திசை நோக்கி வீற்றிருக்கின்றனர்.

குலசேகரப்பட்டினத்தில் நவராத்திரி விழா பெரும் திருவிழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் ஊர் முழுவதும் உள்ள ஆட்ட கலைஞர்கள் அம்மன் வேடமிட்டு தெருவெங்கும் நடன மாடி திருவிழா நடத்த வேண்டிய தொகையை வீடுகள்தோறும் காணிக்கையாக பிச்சையெடுப்பர். புரட்டாசி மாதம் நவராத்திரி சமயத்தில் ஊரெங்கும் ஆடல் பாடல் களைக்கட்டும். கொண்டாடி விட்டு 10-ம் நாள் விஜயதசமியன்று கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

இந்த நவராத்திரி கொண்டாட்டமே குலசேகரப்பட்டினத்தின் மிகப்பெரும் திருவிழாவாகும். இதை தவிர ஆடிக்கொடை திருவிழா, ஐப்பசி விசு, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி போன்ற தினங்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அம்மை நோய் கண்டவர்கள் நலமடைய இங்கே பிரார்த்திக்கின்றனர்.

மேலும் ஊனமுற்றவர்கள், மனநிலை பாதிப்படைந்தவர்கள் சொத்துக்கள் இழந்தவர்கள், வியாபாரம் விருத்தியடைய விரும்புபவர்கள் ஆகியோரும் மாவிளக்கு பூஜை, அங்க பிரதட்சனம், தீச்சட்டி எடுத்தல், வேல் அம்பு குத்தல் என தங்களால் இயன்ற நேர்த்தி கடன்களை செலுத்தி பலன் அடைகின்றனர்.

Tags:    

Similar News