பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றான ராமசாமி திருக்கோவில்- கும்பகோணம்
- கோவில் கருவறையில் உள்ள மூலவர், பட்டாபிஷேக ராமராக வீற்றிருக்கிறார்.
- ராமரும், சீதையும் ஒரே ஆசனத்தில் அமர்ந்திருக்க, அவர்களுக்கு பரதன் குடைபிடித்திருக்கிறான்.
'குடந்தையாம் கும்பகோண அற்புதத் தலத்தில் என் ராகவன் ராமனுக்கோர் பெரிய கோயில் எடுப்பிப்பேன்' என்று உறுதி பூண்டார் ரகுநாத நாயக்கர். எந்த இடத்தில் விஜயநகர வாரிசான ஸ்ரீராமன் எனும் பாலகனுக்கு பல இடர்களுக்குப் பிறகு எதிரிகளின் ராஜதந்திரங்களை முறியடித்து ரகுநாதநாயக்கர் அரச பட்டாபிஷேகம் செய்தாரோ அங்கேயே ஸ்ரீராமனுக்கும் பார்த்துப் பார்த்து கோயிலை கட்டினார். தனக்குள் இருந்த ராம பக்தியையும், சிலிர்த்து சிருங்காரமாக தன்னிலவாக திகழ்ந்த கலைத் திறத்தையும் இத்தலத்தில் அப்படியே அர்ப்பணித்து கோபுரமாக்கினார்.
கும்பகோணத்தின் மையமாக அமைந்துள்ளது ராமஸ்வாமி கோயில். ராஜகோபுரம் நெடிதுயர்ந்து ராமநாம முத்திரையுடன் வரவேற்கிறது. மகாமண்டபத்திற்குள் நுழைந்தவுடன் மாபெரும் எழில் சூழ் சிற்பச் சோலைகளும் எதிர்கொள்கின்றன. மூலஸ்தானத்தில் ராமச்சந்திரமூர்த்தி, தன் சிம்மாசனத்திலேயே சீதா பிராட்டிக்கும் இடம் கொடுத்து, ராஜ்ய பரிபாலன திருக்கோலத்தில், சாளக்கிராம திருமேனியாக சேவை சாதிக்கிறார். ராஜகம்பீரத் தோற்றம்.
இடது காலை மடக்கி மற்றொரு காலை பூமியில் தொங்கவிட்டிருக்கும் அழகு காணுதற்கரியது. நீருண்ட மேகம் போன்ற நிறம். ஞானச் சூரியனின் கிரணங்களால் ஒளிரும் தெள்ளிய திருமுகம். தாமரை போன்ற மலர்ந்த கண்கள் அருட்சாரலைப் பொழிகின்றன. கூரிய நாசி. செவ்விதழ்கள். அதன் ஓரமாகத் தவழும் பேரானந்தப் புன்னகை. கைகள் அபயஹஸ்தம் காட்டி 'எப்போதும் காப்பேன்' என்கிறது. சீதா பிராட்டியார் அருளமுதம் பெருக்கி ராமனிடம் விநயமாக நம் குறைகளை எடுத்துக் கூறுகிறார். நிறைவான வாழ்க்கையை வாரித் தருகிறார். அருகேயே சத்ருக்னன், அண்ணலுக்கு வெண்சாமரம் வீசும் காட்சி வேறெங்கும் காணக் கிடைக்காத அற்புதம்.
லஷ்மணாழ்வார் ராமரின் கோதண்டத்தை கையில் ஏந்திக்கொண்டு, அஞ்சலி ஹஸ்தமாக கை கூப்பியபடி நிற்பதைப் பார்க்கும்போது மனசு நெகிழ்ந்து போகிறது. அவருக்குப் பக்கத்திலேயே பரதாழ்வார் வெண்குடை சமர்ப்பித்துக் கொண்டு நிற்கும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும். எல்லோரையும் தாண்டி, அனைத்தையும் ராம சொரூபமாக பார்க்கும், ராம சேவகன், ராம தாசன், ஆஞ்சநேய ஸ்வாமி இத்தலத்தில் ஆச்சரியமான முறையில் சேவை சாதிக்கிறார்.
கைகளில் வீணை ஏந்தி, சதாகாலமும் ராமகாவியச் சுவடியை பாராயணம் செய்து கொண்டிருக்கும் கோலம் காணக் கிடைக்காது. அக்காட்சியை காணும் போது கண்களில் கண்ணீர் தானாக சுரக்கும். அங்கேயே உற்சவ மூர்த்திகள் பொலிவுடன் காட்சி தருகின்றனர். அந்த சந்நதியில் மனம் அப்படியே கரைந்து போகிறது. அயோத்திக்கே சென்று விட்ட ஓர் உணர்வு சூழ்கிறது. எம்பெருமானுக்கு நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் 'ராம... ராம... ராம...' எனும் திவ்ய நாமத்தை விடாமல் சொல்வதேயாகும். இதுவே சகல சம்பத்தையும் கொண்டு வந்து சேர்க்கும் என்பது வேத ரிஷிகளின் வாக்கு.
விசுவாமித்திர முனிவரின் யாகத்தை காத்தல், தன்னை மீண்டும் அயோத்தி அழைத்துச் செல்ல வந்த பரதனுக்கு தன்னுடைய பாதுகைகளை அளித்தல், தனக்காக உயிர் கொடுத்த ஜடாயுவுக்கு மோட்சம் அளித்தல், முனிவர்களுக்காக அரக்கர்களை அழித்தல், தன்னுடைய துன்பங்களைக் கூறி வருந்திய சுக்ரீவனுக்கு, ஆறுதல் கூறி அவனுடைய ராஜ்ஜியத்தைப் பெற்றுக்கொடுத்தல், தன்னிடம் தஞ்சம் என்று வந்த விபீஷணனுக்கு, அபயமளித்து ராஜ்ஜியம் அளித்தல் என்று ராமபிரான் செய்தவை அனைத்தும், இந்தக் கோவிலின் உட்பிரகாரத்தில் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. கலை மற்றும் சிற்ப ஓவியங்களுக்கு இந்தக் கோவில் ஒரு முன்னுதாரணமாக அமைந்தது என்றால் மிகையல்ல.