பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
- அம்மன் ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்த நிலையில் உள்ளார்.
- அம்மன் 5 முகங்களைக் கொண்டவள்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. கடற்கரையோரமாக அமைந்துள்ள இந்த கோவில் தென்னந்தோப்புகள், மரங்கள் நிறைந்த தோட்டங்கள், வயல்வெளிகளுக்கு மத்தியில் இயற்கை எழில் சூழ்ந்து, அழகுற காட்சி அளிக்கிறது. இந்த ஊரின் பெயரைக் குறித்த விளக்கம் கோவிலுடன் தொடர்புடையதாக உள்ளது. மணல்+தைக்காடு=மண்டைக்காடு ஆனது என்றும் மந்தைகள்+ காடு= மந்தைக்காடு என்பது மருவி மண்டைக்காடு ஆனது என்றும் கூறப்படுகிறது.
புற்று வடிவில் அம்மன்
இந்த கோவிலில் பகவதி அம்மன் வடக்கு முகமாக புற்று வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அம்மன் ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்த நிலையில் உள்ளார். சுமார் 15 அடி உயரம் கொண்ட பெரிய மண் புற்றே இங்கு அம்மனாக வணங்கப்படுகிறது. அம்மன் 5 முகங்களைக் கொண்டவள். புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தரும் அம்மனுக்கு முன்பாக, வெள்ளி சிலையாக அமர்ந்த கோலத்திலும், வெண்கல சிலையாக நின்ற கோலத்திலும் பகவதி அம்மன் காட்சி தருகிறார். மேலும் கோவில் வளாகத்தில் பிரசன்ன விநாயகர் சன்னதியும், பைரவர், கடல் நாகர் (கடலில் இருந்து கிடைத்த கடல் நாகர் சிலை) சன்னதிகளும் உள்ளன.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் எந்த ஆண்டு உருவானது என்பதற்கு சரியான சான்றுகள் இல்லை. மண்டைக்காடு காடாக இருந்த போது ஒரு சித்தர் இங்கு வந்தார். அந்த இடத்தில் தெய்வ ஒளி பரவியதைக் கண்டு அங்கே அமர்ந்தார். ஒரு இடத்தில் ஸ்ரீசக்கரம் வரைந்து தியானம் செய்தார். ஒரு நாள் அவர் மாயமாய் மறைந்து விட்டார்.
சித்தர் ஸ்ரீசக்கரம் வரைந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் மண்டைக்காடு ஊர் சிறுவர்கள், கால்நடைகளை காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்கள். அப்படி ஒருநாள் கால்நடைகளை அழைத்துச் சென்ற சிறுவர்கள் பனங்காயை தூக்கிப்போட்டு கம்பால் அடித்து விளையாடியுள்ளனர். அப்படி அடித்த பனங்காய் ஒன்று அந்த பகுதியில் இருந்த புற்று மீது விழுந்தது. அதனால் புற்று உடைந்து அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள், ஊர் மக்களிடம் கூறினர். புற்று இருந்த இடத்துக்கு ஓடி வந்த ஊர் மக்கள் அப்படியே திகைத்து நின்றனர். அப்போது ஒருவர் சாமி ஆடி குறி சொல்லியிருக்கிறார். இந்த புற்று, தேவி பத்திரகாளி என்றும், பூஜைகள் செய்து வழிபட்டால் வேண்டிய நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் புற்றின் உடைந்த பகுதியில் சந்தனம் பூசினால் ரத்தம் வருவது நிற்கும் என்றும் அந்த நபர் கூறினார். அதன்படி சந்தனம் அரைத்து புற்றின் மீது பூசியிருக்கிறார்கள். உடனே ரத்தம் வருவது நின்றது என்றும் கூறப்படுகிறது.
கேரள பக்தர்கள்
இதேபோல் கேரள மாநிலம் கொல்லம் நகரில் இருந்து பெண் யோகினி மண்டைக்காடு வந்ததாகவும், அந்தப் பெண் கடற்கரையில் தவம் இருந்த இடத்தில் புற்று வளர்ந்ததாகவும், அதுவே பிற்காலத்தில் பகவதி தேவியாக வழிபாட்டுக்குரியதானதாகவும் கூறப்படுகிறது. எனவே யோகினியின் பக்தர்கள் இப்போதும் கொல்லத்தில் இருந்து மண்டைக்காடு கோவிலுக்கு வருகிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
கேரளத்தில் இருந்து குமரி மாவட்டம் பிரிந்த காலகட்டத்தில் தமிழக அரசால் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு கொடிமரமும் நடப்பட்டது. தற்போது தாமிரத்தகடு பொதியப்பட்ட நிரந்தர கொடிமரம் உள்ளது. இந்த கோவிலின் கருவறை, நமஸ்கார மண்டபம் அல்லது பஜனை மண்டபம் அனைத்தும் கேரள பாணியில் ஓடுகளால் வேயப்பட்ட மேற்கூரையால் ஆனது. கருவறையில் புற்று வடிவில் காட்சி தரும் அம்மனுக்கு 1909-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 30 முதல் 40 துலாம் அரைத்த சந்தனம் பூசப்படுகிறது. வடக்குத் திருமுகம் வெள்ளியிலானது. வெள்ளி மகுடமும் உண்டு. அர்ச்சனா படிமமும், விழாப்படிமும் கருவறையில் உள்ளன.
மாசி கொடை விழா
இந்த கோவிலின் நேர்ச்சைகளாக வில்லுப்பாட்டு, மரம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட கை, கால் உறுப்பு காணிக்கை, வெடி வழிபாடு, முத்தப்பம், மண்டையப்பம், பொங்கல், கைவிளக்கு, பூமாலை, குத்தியோட்டம், கறுப்பு வளையல், விளைச்சலில் முதல் பொருள் ஆகியன உள்ளன. வில்லிசைக்கலை என்ற கிராமியக் கலைநிகழ்ச்சி பாடுமாறு நேர்ந்து கொள்ளுதல் இந்த கோவிலின் சிறப்பு. காணிக்கை கொடுப்பவரின் ஊரில் இருந்து மண்டைக்காடு வரையுள்ள இடங்களை பாடுவது இதன் சிறப்பு.
முள்முருங்கை போன்ற மரங்களில் செய்யப்பட்ட சாயம் பூசப்பட்ட கை- கால் உறுப்புகளை வாங்கி கோவில் தட்டுப்பந்தலில் எறிவது மற்றொரு நேர்ச்சை. 27 நெய் தீபம் ஏற்றி அம்மன் சன்னதியை வலம் வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தலைநோய் தீர அம்மனுக்கு மண்டையப்பமும், அம்மை நோய் வராமலோ, வந்தால் குணமாகவும் முத்தப்பமும் நேர்ச்சையாக படைத்து வழிபடுகின்றனர். இவை தவிர வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் முதலியவையும் நைவேத்தியமாக கொடுக்கப்படுகிறது. எடைக்கு எடை துலாபாரம் வழங்குவதும் இந்த கோவிலின் கூடுதல் சிறப்பாகும்.
கோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் நடைபெறும் கொடை விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த கோவிலில் திதி அல்லது நட்சத்திரம் அடிப்படையில் அல்லாமல் கிழமையை அடிப்படையாகக் கொண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். மாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமைகளில் விழா நிறைவடையும் வகையில் 10 தினங்களுக்கு முன் கொடி ஏற்றுவிழா தொடங்கும். 6-ம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை அன்று வலிய படுக்கை பூஜை என்ற சிறப்பு பூஜை நள்ளிரவு 12 மணிக்கு நடக்கும்.
இந்த பூஜையில் திரளி கொழுக்கட்டை, அவல், பொரி, முந்திரி, கற்கண்டு, 13 வகை வாழைப்பழங்கள், இளநீர், பிற பழவகைகள் ஆகியவை அம்மனுக்கு முன் குவியலாக படைக்கப்பட்டு அவற்றின் மேல் தீப்பந்தங்கள் வைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். 9-ம் நாள் திருவிழா அன்று பெரிய சக்கர தீவட்டி நடைபெறும். 10-ம் நாள் திருவிழாவன்று ஒடுக்கு பூஜை நடைபெறும். இதில் சாஸ்தா கோவிலில் தயாரிக்கப்பட்ட பருப்பு உள்பட 11 வகை கறி, குழம்புகள், சாதம் ஆகியவற்றை தலையில் சுமந்து வந்து கோவிலின் கருவறையில் வைப்பார்கள். நள்ளிரவு 1 மணிக்கு பூஜை நடைபெறும். இவற்றை தயாரிக்கும் முறை, கொண்டு வருதல் ஆகியவற்றின் மரபுவழி முறை இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.
பெண்களின் சபரிமலை
சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் விரதமிருந்து, இருமுடிகட்டி செல்வதைப்போல, மாசிக்கொடை விழாவுக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களால் முடிந்த அளவு விரதமிருந்து இருமுடிகட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வருவார்கள். இதனால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. ஆவணி மாதம் அஸ்வதி நட்சத்திரம் அன்று நடைபெறும் பொங்கல் விழாவும் இந்த கோவிலின் சிறப்பு நிகழ்வாகும். இதில் கோவிலின் முன்பு 4 திசைகளிலும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.
பங்குனி மாதத்தில் பரணி நட்சத்திர கொடை விழா அன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளியன்றும் வலிய படுக்கை பூஜை நடைபெறும். திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த கோவிலில் பரணி நட்சத்திரம் தோறும் தங்கத்தேரில் அம்மன் பவனி வருவார். பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற ரூ.1,500 கட்டணம் செலுத்தி தங்கத்தேர் இழுக்க அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு கட்டணம் செலுத்துபவர்களுக்கு பிரசாதம், அர்ச்சனைத்தட்டு, சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படும்.
கோவிலில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, மதியம் 12.30 மணிக்கு உச்சகால பூஜை நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8 மணிக்கு அத்தாள பூஜை நடத்தி நடை சார்த்தப்படும்.