கோவில்கள்
null

மாங்குளம் ஸ்ரீ பராசக்தி தேவி திருக்கோவில்- கேரளா

Published On 2023-05-04 04:31 GMT   |   Update On 2023-05-04 04:32 GMT
  • பராசக்தியின் உத்தரவை ஏற்று அந்த இடத்தில் ஒரு சிறிய கோவில் கட்டப்பட்டது.
  • செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் சிறப்பு தரிசனம் நடத்தி வருகிறார்கள்.

கேரள மாநில தலைநகரம் திருவனந்தபுரத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் பட்டத்தின், மரப்பாலம் முட்டடா சாலையின் மேற்குப்பகுதியில் சக்தி வாய்ந்த ஆதிபராசக்தி கோவிலான பிரசித்தி பெற்ற மாங்குளம் ஸ்ரீ பராசக்தி தேவி கோவில் உள்ளது. அனந்தபுரியின் மூகாம்பிகை என்றழைக்கப்படும் இக்கோவிலில், தினசரி பூஜை நடைபெற்று வருகிறது.

இந்த கோவில் திருநடையில் நினைத்த காரியங்கள் நிறைவேறவும், நோய்களில் இருந்து நிவாரணம் பெறவும் பலா, அன்னாசி உள்பட முள்ளுள்ள பழங்களை படைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

இந்த கோவில் உருவான வரலாறு குறித்த விவரம் வருமாறு:-

ஆதிபராசக்தியின் பக்தரான கோவில் தலைமை பூசாரி, பல ஆண்டுகளுக்கு முன் கொடுங்கல்லூர் கோவில் தரிசனம் முடிந்து திரும்பும் வழியில், முக ஐஸ்வர்யத்துடன் ஒரு மூதாட்டியும், ஒரு இளம்பெண்ணும் பேசிக்கொண்டு இருப்பதை கண்டார். அவர்களை சந்தித்த அவருக்கு பெண்கள் பூஜை ரகசியங்களை சொல்லி கொடுத்தனர். இதை தொடர்ந்து வீட்டிற்கு வந்த அவர் தனி அறையில் அமர்ந்து தமிழில் உருக்கமாக பிரார்த்தனை செய்ய தொடங்கினார்.

அப்போது தான் குடி இருக்க தனியாக இடம் வேண்டும் என வேண்டினார். அடுத்த நாள் அவர் தந்தையின் கனவில் தோன்றிய தேவி, ஆதிபராசக்தியின் அருள் பக்தரிடம் நிறைந்து உள்ளது எனவும், ஆதலால் பக்தரின் வேண்டுதலை ஏற்று இப்போது வசிக்கும் இடத்திலேயே ஒரு சிறிய கோவில் கட்டி கொடுக்கவும் என்று கூறி கனவில் இருந்து மறைந்தார்.

பக்தர்கள் வருகை

பராசக்தியின் உத்தரவை ஏற்று அந்த இடத்தில் ஒரு சிறிய கோவில் கட்டப்பட்டது. அதில் அந்த பக்தர் பூசாரியாக ஆதிபராசக்திக்கு பூஜை வழிபாடுகளை நிறைவேற்றினார். பூஜைகளை முறைப்படி கற்றிராத அந்த பூசாரி நாளடைவில், முற்றும் தெரிந்த பூசாரியை போல் ஆதிபராசக்தியின் அருளால் பூஜை வழிபாடுகளை நிறைவேற்றி வருகிறார். இந்த கோவில்தான் மாங்குளம் ஸ்ரீபராசக்தி தேவி கோவிலாக அறியப்படுகிறது. ஆதி பராசக்தியின் அருட் செயலை கேள்விப்பட்டு கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வர தொடங்கினர்.

குறிப்பாக செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் சிறப்பு தரிசனம் நடத்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து ஆதிபராசக்தியின் பக்தனான தலைமை பூசாரி, பிரச்சினைகளுக்கு பரிகார மார்க்கங்களை சொல்லி கொடுக்க தொடங்கினார். அவர்களின் துன்பங்களுக்கு பூசாரி பல்வேறு பரிகாரங்களை பரிந்துரை செய்து வருகிறார். நினைத்த காரியங்கள் நிறைவேறவும், நோய், நொடிகளில் இருந்து மீண்டு வரவும் இங்கு பரிகாரம் சொல்லி கொடுக்கப்படுவதால் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் தேவியை தரிசிக்க கோவிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். ஸ்ரீ ஆதிபராசக்தி தேவியையும், ஸ்ரீ பத்ரகாளி தேவியையும், சமமாக வழிபடும் இக்கோவிலில் திருவிழா நாட்களில் நடத்தப்படும் அஷ்டலட்சுமி பூஜை, படைப்பு, பூப்படை ஆகியவை சிறப்பானவையாகும்.

ஆதிபராசக்தியின் தெய்வீக அருள் குடிகொண்ட இக்கோவிலில் நாளைமறுநாள் (சனிக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை 11 நாட்கள் மகாகாலேஸ்வர யாகம் நடக்கிறது.மகாகாலேஸ்வர யாக பூஜைகள் 16-ந் தேதி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News