7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் மருதமலை சுப்பிரமணியசுவாமி திருத்தல வரலாறு
- மருதமரங்கள் அதிகமாக காணப்படுவதால் இந்த மலை மருதமலை என்று அழைக்கப்படுகிறது
- ஆறுபடை வீடுகளை கொண்டு குன்றதோரும் குமரக்கடவுள் எழுந்தருளி இருக்கிறார்.
மூலவர் - சுப்பிரமணிய சுவாமி/தண்டாயுதபாணி/மருதாசலமூர்த்தி (மருதப்பா)
அம்மன்/தாயார் - வள்ளி, தெய்வயானை
தல விருட்சம் - மருதமரம்
தீர்த்தம் - மருத தீர்த்தம்
பழமை சுமார் - 800 ஆண்டுகள்
ஆறுபடை வீடுகளை கொண்டு குன்றதோரும் குமரக்கடவுள் எழுந்தருளி இருக்கிறார். இதில் கோவையை அடுத்த மருதமலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவில் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது.
இந்த கோவில் கோவை நகரில் இருந்து வடமேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில், தரை மட்டத்தில் இருந்து 500 அடி உயரத்தில் மலையில் அமைந்து உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்த மருதமலை கோவிலின் 3 புறங்களிலும் மயில் தோகை போல விரிந்து மலை காட்சி அளிக்கிறது. இதனால் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து அருள்பாலிப்பது போன்ற காட்சி மனக்கண் முன் தோன்றுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.
மருதமரங்கள் அதிகமாக காணப்படுவதால் இந்த மலை மருதமலை என்று அழைக்கப்படுகிறது. மேலும் மருத மால் வரை, மருத வரை, மருத வேற்பு, மருதக் குன்று, மருதலோங்கல், கமற் பிறங்கு, மருதாச்சலம், வேள் வரை, என்றெல்லாம் பேரூர் புராணத்தில் கூறப்படுகிறது.
மருதமலை ஆண்டவன் என்று அழைக்கப்படுவதற்கு காரணம் மருத மரங்கள் நிறைந்த மலைக்கு தலைவன் என்பதாகும். மருத மலையான், மருதப்பன், மருதாச்சல மூர்த்தி போன்ற பெயர்களாலும் இந்த மருதமலையில் எழுந்தருளி உள்ள முருகப் பெருமான் அழைக்கப்படுகிறார்.
புதியதாக அமைக்கப்பட்ட பாதை இராஜகோபுரத்தின் வழியே நேராக தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்கிறது. இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர், அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு, அடுத்து உலோகக் கொடிமரம், மயில்வாகனம், முன்மண்டபத்தில் வரதராஜப் பெருமாள் சன்னிதி, அர்த்தமண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறத்திலும் விநாயகரும் (இடப்புறம்) வீரபத்திரரும் (வலப்புறம்), கருவறையில் தண்டத்துடன் காட்சிதரும் தண்டாயுதபாணி என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வலம்புரி விநாயகரின் முன்னுள்ள மயில்முக விளக்கின் அடிப்புற ஆமைவடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் குறிப்பிடத்தக்கவை.
இது தனிப்பட்ட முருகன் கோயிலாக இருந்தாலும் இங்கு முருகன், சோமாஸ்கந்தனாக வெளிமண்டபத்தில் வலப்புறம் பட்டீசுவரர், இடப்புறம் மரகதாம்பிகை சன்னிதிகளுடன் உள்ளார். மரகதாம்பிகை சன்னிதிக்கு எதிராக வெளி மண்டபத்தில் நவகிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளது. மற்றும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகியோருக்கும் வெளிமண்டபச் சுவற்றில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
மலையின் அடிவாரத்திலிருந்து நடைப்பயணமாகச் செல்லும் போது, பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னிதியும், சற்று மேலே சென்றால் இடும்பன் சன்னிதியும் அமைந்துள்ளன. மலையின் மீது சென்றதும் அங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் இறுதிப் படிக்கட்டுகள் ஆதிமூலஸ்தானத்திற்கு நேரெதிராக உள்ளன. இப்பாதைவழிச் செல்பவர்கள் ஆதி மூலஸ்தானத்தில் சுயம்புவாக உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையையும் அதற்கடுத்து, பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம்.
மருதமலையில் கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள் பிரதிஷ்டை செய்த லிங்கம்
கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள் பழனி அருகே உள்ள இடும்பன் மலையில் அமர்ந்து இடும்பன் சுவாமிகளை வழிபட்டு வருவார். இவர், கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் உள்ள இடும்பன் சுவாமி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். இப்படி வழிபாடு செய்ய வரும் போது தான் மருதமலையில் உள்ள இடும்பன் கோவிலின் பின்புறம், இடும்பனை சுற்றி வரும் பிரகாரத்தில் மருதமரத்தார் மருந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்தார்.
இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நோய்களை தீர்த்து அனைத்து நலங்களையும், வளங்களையும் வழங்குவதற்காக இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக பக்தர்களிடம் கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள் தெரிவித்துள்ளார். தற்போது மருதமலையில் இவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த லிங்கத்தை பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம்.
தினமும் அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வழிபாடு செய்யலாம். மருதமலைக்கு வரும் பக்தர்கள் முதலில் அங்குள்ள தான் தோன்றி விநாயகர், இடும்பன் சுவாமிகள், மருந்தீஸ்வரர் லிங்கத்தை தரிசித்து விட்டு தான் முருகப்பெருமான், பாம்பாட்டி சித்தரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இதன் மூலம் மருந்தீஸ்வரர் லிங்கம் பக்தர்களின் மனங்களில் பக்தியை சித்தியாக்கி பரவசம் கொள்ள செய்வதாக பக்தர்கள் கருதுகிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மருதமரத்தார் மருந்தீஸ்வரர் லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.