கோவில்கள்

முத்தான வாழ்வு அருளும் முந்தி விநாயகர் திருக்கோவில்

Published On 2022-09-02 07:43 GMT   |   Update On 2022-09-02 07:43 GMT
  • முந்தி விநாயகர் 19 அடி 10 அங்குலம் உயரமும், 11 அடி 10 அங்குலம் அகலமும் கொண்டவர்.
  • ராகு-கேது தோஷம், நவக்கிரக தோஷம் விலக இந்த விநாயகரை வணங்கலாம்.

கோயம்புத்தூர் புலியகுளத்தில் அமைந்துள்ளது முந்தி விநாயகர் திருக்கோவில். ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட, பிரமாண்டமான விநாயகரை இங்கே தரிசிக்கலாம்.

இங்கு அருளும் விநாயகப் பெருமானின் தும்பிக்கை, வலம் சுழிந்து காணப்படுகிறது. நான்கு கரங்களுடன் அருளும் இந்த விநாயகர் தன்னுடைய வலது முன் கரத்தில் தந்தமும், வலது பின் கரத்தில் அங்குசமும், இடது முன் கரத்தில் பலாப்பழமும், இடது பின் கரத்தில் பாசக் கயிறும் தாங்கி காட்சி தருகிறார். தும்பிக்கையில் லட்சுமியின் அம்சமான அமிர்தகலசத்தை வைத்திருக்கிறார்.

தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் இந்த முந்தி விநாயகர், தன்னுடைய வயிற்றில் வாசுகி பாம்பை கட்டியிருக்கிறார். இதனால் நாகதோஷம் உள்ளவர்கள் இந்த விநாயகரை வணங்கினால், அந்த தோஷங்கள் விலகி ஓடும். இந்த விநாயகரின் வலது பகுதி ஆண்களைப் போலவும், இடது பகுதி பெண்களின் வடிவிலும் அமைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். இந்த விநாயகர் அரச மரத்தடியின் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பதால் அருள் கடாட்சம் அதிகம். மேலும் இவரது இடது திருவடியில் சித்த லட்சுமியின் அம்சமான பத்ம சக்கரம் இருப்பதால், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குபவராக இருக்கிறார்.

இந்த முந்தி விநாயகரின் பிரமாண்டமான உருவம், 21 சிற்பிகளைக் கொண்டு, 6 ஆண்டுகால உழைப்பினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் தேடி அலைந்து, முடிவில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி என்ற இடத்தில் இந்த விநாயகரின் உருவம் செய்வதற்காக மிகப்பெரிய பாறை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் அங்கேயே வைத்து இந்த சிலை செய்யப்பட்டு, புலியகுளம் கொண்டுவரப்பட்டது. ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட இந்த பிரமாண்ட முந்தி விநாயகர், சுமார் 19 அடி 10 அங்குலம் உயரமும், 11 அடி 10 அங்குலம் அகலமும் கொண்டவர். சுமார் 190 டன் எடை கொண்டவர்.

இந்த விநாயகர் சிலையை நிலைக்கு கொண்டுவர எந்த இயந்திரத்தின் துணையும் பயன்படுத்தப்படவில்லையாம். முழுக்க முழுக்க மனித சக்தியை பயன்படுத்தியே, இதை அதன் மூலஸ்தானத்தில் நிலை நிறுத்தியிருக்கிறார்கள். எனவேதான் இந்த பிரமாண்ட முந்தி விநாயகரை நிலை நிறுத்துவதற்கு 18 நாட்கள் தேவைப்பட்டிருக்கிறது. இதற்காக சாய்வு தளம் ஒன்றை உருவாக்கி, இரும்பு சங்கிலி மற்றும் உருளைகளின் உதவியோடு, கொஞ்சம் கொஞ்சமாக மூலஸ்தானத்தில் நிலைநிறுத்தி உள்ளனர்.

இந்த ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி தினம் வெகு விமரிசையாக நடைபெறும். சித்திரை முதல் நாள் அன்று, பல்வேறு வகையான சுமார் 3 டன் பழங்களைக் கொண்டு விநாயகருக்கு அலங்காரம் செய்கிறார்கள். அதே போல் விநாயகர் சதுர்த்தி அன்று, மூன்று டன் எடை கொண்ட பல்வகை பூக்களும், மலர் மாலைகளும் கொண்டு விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்படும். நவராத்திரி விழாவும் இங்கு சிறப்பான முறையில் நடக்கிறது.

சரஸ்வதி பூஜை அன்று, குழந்தைகளுக்கு நாக்கில் பிரணவ வடிவமான விநாயகரின் மூல மந்திரத்தை எழுதி, கல்விப் பயணத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. ராகு-கேது தோஷம், நவக்கிரக தோஷம் விலகஇந்த விநாயகரை வணங்கலாம். மேலும் திருமண வரம் கைகூட, குழந்தை பாக்கியம் கிடைக்க, குடும்பம் ஒற்றுமையாக நடைபெறவும் இந்த விநாயகரை வணங்கிச் செல்கிறார்கள்.

சித்திரை முதல் நாள், தை முதல் நாள், ஆடி வெள்ளி, வளர்பிறை சதுர்த்தி தினங்களில் இந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் அரிசி மாவு, மஞ்சள், பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 திரவியங்களைக் கொண்டு மகா அபிஷேகம் செய்கிறார்கள்.

கோயம்புத்தூர் காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, புலியகுளம் முந்தி விநாயகர் திருக்கோவில்.

Tags:    

Similar News