கோவில்கள்

ஜாம்புவானோடை தர்காவின் எழில்மிகு தோற்றம்.

சமூக நல்லிணக்கத்துக்கு சான்றாக விளங்கும் ஜாம்புவானோடை தர்கா

Published On 2022-12-01 05:22 GMT   |   Update On 2022-12-01 05:22 GMT
  • எண்ணிலடங்காத அற்புதங்கள் அங்கு நடந்தேறி வருகின்றன.
  • கந்தூரி விழா 14 நாட்கள் பாரம்பரியமாக நடந்து வருகிறது.

ஜாம்புவானோடை தர்கா சமூக நல்லிணக்கத்துக்கு சான்றாக விளங்குகிறது என பாரம்பரிய முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹிப் உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அன்றைய காலத்தில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக முத்துப்பேட்டை இருந்தது. இதன் அருகே உள்ள ஒரு கிராமம் ஜாம்புவானோடை. கடந்த 1306-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி (ஹிஜ்ரி 727 ஜமாதுல் அவ்வல் மாதம் முதல் பத்து) அன்று ஜாம்புவானோடை கிராமத்தை சேர்ந்த கருப்பையா கோனார் என்பவர் விவசாயத்திற்காக ஏர் உழுது கொண்டிருந்தார்.

அப்போது ஏர் கொம்பு முனை பட்டு நிலத்தில் இருந்து ரத்தம் பீரிட்டு கருப்பையா கோனாரின் கண்களில் அடித்தது. இதனால் அவர் உடல் தளர்ந்து கண்ணொளி மங்கி தள்ளாடியவராக வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ஒருவித மன குழப்பத்துடன் அவர் இரவு உறங்கும்போது, அதுவரை பார்த்திடாத அழகிய அரபி தோற்றமுடைய பெரியவர் கனவில் தோன்றி, 'நீர் ஏர் உழுத இடத்தில் நான் வெகு காலத்திற்கு முன்பு அடக்கமாகி இருக்கின்றேன்.

என்னுடைய பெயர் ஷெய்குதாவூது என்பதாகும். உன்னுடைய இரு கண்களும் எல்லாம் வல்ல அல்லாவின் அருளால் மீண்டும் பிரகாசம் பெற்றுவரும் கவலைப்பட வேண்டாம். இங்கிருந்து 6 கல் தொலைவிலுள்ள நாச்சிகுளத்தில் வட புலத்தைச் சார்ந்த 2 பெரியவர்கள் கபீர்கான், ஹமீதுகான் ஆகிய இருவரிடம் சென்று நடந்ததை கூறி அவர்களை அழைத்து வந்து ஏர் உழுத இடத்தில் தெற்கு வடக்காக எனது தலைபாகத்திலும், கால் பாதத்தில் இரண்டு புஷ்பங்கள் இருப்பதை காண்பீர்கள் என்று கூறி ஜியாரத்தை கபுர் இருக்கும் இடத்தை அமைத்து விளக்கு ஏற்ற சொல் என கூறிவிட்டு அந்த மகான் மறைந்து விட்டார்கள்.

இதையடுத்து அவர் கண்விழித்து பேரானந்தத்துடன் மகான் சொன்ன பெரியவர்களை சந்தித்து அழைத்து வந்து விளக்கேற்றி ஜியாரத் செய்தார்கள். அன்று முதல் எண்ணிலடங்காத அற்புதங்கள் அங்கு நடந்தேறி வருகின்றன.

மனித அறிவுக்கு அப்பாற்பட்டு மனித குலம் மற்றும் மருத்துவ உலகம் ஆச்சரியத்தில் உறையும் வண்ணம் பலப்பல நிகழ்வுகள் கடந்த 715 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அதன் நினைவாக மகான் அவர்களுக்கு அன்று தொட்டு இன்று வரை பெரிய கந்தூரி விழா 14 நாட்கள் பாரம்பரியமாக நடந்து வருகிறது.

ஜமாதுல் அவ்வல் பிறை 1-ல் புனித கொடி ஏற்றம், ஜமாதுல் அவ்வல் பிறை 10-ல் புனித சந்தனக்கூடு, ஜமாதுல் அவ்வல் பிறை 14-ல் புனித கொடி இறக்கமும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். குறிப்பாக மேன்மை தங்கிய மகான் ஹக்கீம் ஷெய்குதாவூது காமில் வலியுல்லாஹ் ஆண்டகையை நாகூர் குத்பு ஜமான் சாகுல் ஹமீது பாதுஷா நாயகம், கீழக்கரை பல்லாக்கு வலியுல்லா, இலங்கையில் அடக்கமாகி அருள்பாலிக்கும் மகான் தாலையன் பாவா, மகான் பொதக்குடி நூர் முஹம்மது வலியுல்லா, மகான் சதக்கத்துல்லா அப்பா ஆகியோர் இந்த உலகை விட்டு மறையும் முன்பு ஜியாரத்து செய்தார்கள் என்பது சிறப்பம்சம்.

எங்கள் மகான் நிகழ்த்திய அற்புதங்கள் மிகவும் அதிகம். இந்த மகானின் தர்கா தஞ்சையை ஆட்சி செய்த அச்சுதப்ப நாயக்கர்களால் மராட்டிய கலை நயத்துடன் கட்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை சாதி, மத பேத மில்லாமல், சமூக நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களுக்கும் நன்மையும், நலமும், வளமும், இறையருளும் என்றென்றும் கிடைக்க எங்கள் மேன்மைதங்கிய மகான் ஹக்கிம் ஷெய்குதாவூது காமில் வலியுல்லாஹ் ஆண்டகை எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் இருகரம் ஏந்தி துஆச் செய்தவர்களாக இருக்கிறார்கள். இது இன்ஷா அல்லாஹ் கியாமத் நாள் வரை தொடரும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News