காரைக்குடியில் உள்ள நகரத்தாரின் 9 ஆலயங்கள்
- கடல் வழி வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்கள், நகரத்தார்.
- நகரத்தாரின் 9 ஆலயங்கள் பற்றி இங்கே சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற சொல்லுக்கு ஏற்ப, கடல் வழி வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்கள், நகரத்தார். காவிரிப்பூம்பட்டினத்தை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்த இவர்கள், ஆழிப்பேரலை மற்றும் வேறு சில மாறுதல்களின் காரணமாக, பாண்டிய நாட்டிற்கு வந்தனர். அவர்கள் வசிப்பதற்கு பாண்டிய மன்னர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கொடுத்தார். நெடுங்காலம் காரைக்குடியில் வசித்த நகரத்தார், நாளடைவில் ஒன்பது ஊர்களுக்கு பிரிந்தனர். அவை காரைக்குடியைச் சுற்றியுள்ள, இளையாத்தன்குடி, மாத்தூர், வைரவன் கோயில், நேமங்கோயில், இலுப்பைக்குடி, சூரக்குடி, வேலங்குடி, பிள்ளையார்பட்டி, இரணியூர் ஆகும். இங்கிருக்கும் ஒன்பது ஆலயங்கள், நகரத்தார் ஆலயங்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றி இங்கே சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
இளையாத்தன்குடி
இங்கு மிகவும் பழமையான கயிலாயநாதர் கோவில் உள்ளது. இந்த ஆலயம் பாண்டிய மன்னரால் கி.பி. 707-ல் கட்டப்பட்டிருக்கிறது. தேவர்கள் அனைவரும் அசுரர்களுக்கு பயந்து பல இடங்களில் மறைந்து வாழ்ந்தனர். அப்போது தேவர்களுக்கு மனநிம்மதியை வழங்கிய இடம் இது. எனவே அங்கு மணலில் ஒரு சிவலிங்கம் செய்து வழிபட்டனர். சிவனருளால், பைரவர் தோன்றி அரக்கர்களை அழித்து, தேவர்களை காத்தார். தேவர்களை இளைப்பாறச் செய்த காரணத்தால், இந்த ஊர் 'இளையாற்றங்குடி' என்று பெயர் பெற்றது. அதுவே 'இளையாத்தன்குடி' ஆனது. இவ்வாலய இறைவனின் திருநாமம், கயிலாயநாதர். அம்பாளின் திருநாமம், நித்யகல்யாணி. வெளிப் பிராகாரத்தில் சிறிய சன்னிதியில் தனியாக அரசமங்களேஸ்வரர் மற்றும் மங்களாதேவி பிரதிஷ்டையாகி இருக்கிறார்கள். இந்த ஆலயம் காரைக்குடியிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது.
இரணியூர்
காரைக்குடியிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது, இரணிக் கோயில். இங்கு ஆட்கொண்டநாதராக இறைவனும், சிவபுரந்தேவியாக அம்பாளும் அருள்பாலித்து வருகின்றனர். ஐந்து நிலை கொண்ட கோபுரம் உள்ளது. இவ்வாலயத்தின் சிற்ப வேலைப்பாடுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அவ்வளவு அழகு. கோவில் மேல் உத்திரத்தில் மூலிகைச்சாறு கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள், அம்மன் சன்னிதி முன் நவதுர்க்கைகளும் தூண்களில் அணிவகுத்து நிற்கும் கோலம் போன்றவை கண்கொள்ளாக் காட்சிகளாகும். பைரவருக்கு தனிச் சன்னிதி உள்ளது.
பிள்ளையார்பட்டி
இங்கு மூலவராக விநாயகர் அருள்பாலிக்கிறார். கற்பக விநாயகர் என்ற திருநாமம் தாங்கியிருக்கிறார். கருவறையில் இரண்டு கரங்களில் ஒன்றில் லிங்கத்தையும், மற்ெறாரு கரத்தால் இடுப்பு கச்சையையும் பிடித்தபடி இருக்கிறார். துதிக்கை, வலது பக்கம் சுழன்று உள்ளது. இது ஒரு குடவரைக்கோவில். விநாயகர் சிலை, அந்த குகை பாறையோடே செதுக்கப்பட்டுள்ளது. விநாயகரை அடுத்துள்ள சிவபெருமான், திருவீசர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். ஆவணி மாதம் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா, இங்கு வெகு விமரிசையாக நடைபெறும்.
நேமங்கோயில்
காரைக்குடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, நேமநாதர் ஆலயம். இது கி.பி. 714-ம் ஆண்டு கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. சுவாமியின் பெயர் நேமநாதர், ஜெயங்கொண்ட சோழீசர் என்பதாகும். அம்பாள் திருநாமம் சவுந்திரநாயகி. இக்கோவில் ஐந்துநிலை கொண்ட கோபுரத்துடன் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் விநாயகர் பல்வேறு கோலங்களில் காட்சி தருகிறார். நின்ற திருக்கோலம், நடன கணபதி, வல்லப கணபதி, தசபுஜ கணபதி என்று விநாயகரின் வித்தியாசமான சிற்பங்களை இங்கே தரிசிக்கலாம். அதேபோல் ஆறுமுகப்பெருமானும் பன்னிரு தோள்களுடன் பல ஆயுதங்களைத் தாங்கி அருள்பாலிக்கிறார்.
வேலங்குடி
காரைக்குடியிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது, இந்த ஊர். வேல மரங்கள் அதிகமாக உள்ளதால் இப்பெயர் வந்தது. சுவாமியின் திருநாமம் கண்டீசர். அம்பாளின் பெயர், காமாட்சி. இந்த ஆலயம், மூன்று நிலைகள் கொண்ட சிறிய கோபுரத்துடன் உள்ளது. இங்கே மாணிக்கவாசகரும், அவருக்கு அருகில் யோக தண்டமும் உள்ளது. இந்த தண்டம், நகரத்தார்களுக்கு உபதேசம் கொடுக்கும் குருவிற்கு உரியதாம். இதற்கு இன்றும் பூஜை செய்யப்படுகிறது. பைரவருக்குத் தனிச் சன்னிதி இருக்கிறது.
மாத்தூர்
காரைக்குடியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது, மாத்தூரில் உள்ள அதோதீஸ்வரர் கோவில். இது 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. ஐந்து நிலைகள் கொண்ட நெடுங்கோபுரம் நம்மை வியந்து பார்க்க வைக்கிறது. ஆலய கொடி மரத்தருகே நந்தியம் பெருமான் சிம்ம பீடத்தில் அமர்ந்திருப்பது எங்குமே காணமுடியாத ஒன்று. இத்தல இறைவனின் திருநாமம் அதோதீஸ்வரர். அம்பாள் - பெரிய நாயகி. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி தலையில் கிரீடத்துடன் காட்சி தருவது அரிதானது. இங்குள்ள நந்தியம்பெருமானுக்கு மாப்பிள்ளை அலங்காரம் செய்வதாக நேர்ந்து கொண்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.
சூரக்குடி
காரைக்குடியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது இந்த இடம். மிகவும் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. சூரை மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இத்தலத்திற்கு சூரக்குடி என்ற பெயர் வந்தது. சுவாமியின் திருநாமம், தேசிகநாதர். அம்பாளின் திருநாமம், ஆவுடைநாயகி. மாமரம் ஆலய தல விருட்சமாக உள்ளது. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி இரண்டு சிங்கங்களுடன் காட்சி தருகிறார். அவர் அமர்ந்திருக்கும் கல்லால மரம், அதன் கிளைகள், அதிலுள்ள இலைகள், மலர்கள் என எல்லாப் பகுதிகளுமே ஒரே கல்லில் செதுக்கப்பட்டவை. பைரவருக்கு தென் பகுதியில் தனிச் சன்னிதி உள்ளது.
வைரவன்பட்டி
காரைக்குடியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஆலயத்தின் இறைவன் பெயர், வளிஒளிநாதர். அம்பாளின் திருநாமம் வடிவுடைநாயகியம்மை. அசுரர்களுக்கு அஞ்சி பூலோகம் வந்த தேவர்கள், ஒரு வனத்திற்குள் புகுந்தனர். அங்கு அவர்களுக்கு ஆனந்தம் கிடைத்தது. அங்கு ஈசனும், அம்பாளும் கோவில் கொண்டிருப்பதை கண்டு மகிழ்ந்தனர். திருவண்ணாமலையில் தீப்பிழம்பாய் காட்சி தந்த ஈசனே, இங்கு வளர்ஒளிநாதராக இருப்பதை தேவர்கள் உணர்ந்தனர். வளர்ஒளிநாதர் என்பதே வளிஒளிநாதர் என்றானது. இங்கு பைரவருக்கு தனிச்சன்னிதி உள்ளது. தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் அருளும் அவர், நான்கு கரங்களில் சூலம், கபாலம், டமருகம், நாகபாசம் ஆகியவற்றை தாங்கியிருக்கிறார். காசிக்கு சமமானதாக இந்த தலம் போற்றப்படுகிறது. காசியில் இறந்தால் முக்தி. அதே போல் இங்கு இறப்பவர்களை, கயிலாயத்திற்கு அனுப்பிவைப்பாராம், இங்கு அருளும் பைரவர்.
இலுப்பைக் குடி
இதுவும் காரைக்குடியில் இருந்து 5 கிலோமீட்டரில்தான் இருக்கிறது. ஒரு காலத்தில் இந்த இடம் இலுப்பைக் காடாக இருந்ததால், இந்தப் பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள். இத்தல இறைவனின் பெயர் சுவயம்பிரகாசர், தான்தோன்றீஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் சவுந்திரநாயகி. இங்கு பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் உண்டு. இந்த இடம் பிரம்மதேவன் பூஜை செய்த இடம் என்றும், நான்கு வேதங்களும் பூஜித்த தலம் என்றும் சொல்கிறது தல வரலாறு. இரண்டு திசைகளிலும் முகத்தை திரும்பிய வண்ணம் இரண்டு நாய்களுடன் பைரவர் காட்சி தருகிறார்.