கோவில்கள்

நாட்டரசன் கோட்டையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் கோவில்

Published On 2022-10-06 01:31 GMT   |   Update On 2022-10-06 01:31 GMT
  • கம்பர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் ஒரு கல்லை நட்டு வணங்கி வந்தனர்.
  • 150 ஆண்டுகள் கழித்து கம்பருக்கு அப்பகுதி மக்கள் கோவில் எழுப்பினர்.

கி.பி. 9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ நாட்டில் தேரழுந்தூரில் கம்பர் வாழ்ந்து வந்தார். காளி கோவிலில் பூசாரியாக இருந்த அவருக்கு காளியின் அருளால் புலமை சிறப்பு ஏற்பட்டது. இதனால் அரசர்களின் நன்மதிப்பை பெற்றார். இந்நிலையில் கம்பரின் ஒரே மகன் அம்பிகாபதி சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் மகள் அமராவதியை காதலித்தார். இதனால் கோபமுற்ற சோழ மன்னன் அம்பிகாபதிக்கு மரணதண்டனை விதித்தார்.

இதை அறிந்த அமராவதி அம்பிகாபதியின் பிரிவை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். மகளை இறந்ததால் கோபம் கொண்ட சோழ மன்னன் கம்பரை நாடு கடத்த உத்தரவிட்டான். இதனால் கம்பர் பாண்டிய நாடு வந்தார். மகனை பிரிந்த சோகத்தால் எங்கும் தங்க மனம் இல்லாமல் சென்று கொண்டே இருந்தார். அவ்வாறு செல்லும்போது காளையார்கோவில் அருகே உள்ள முடிக்கரை ஜமீனை காண விரும்பினார்.

அதற்காக நாட்டரசன் கோட்டை அருகே உள்ள ஒத்தையடி பாதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களிடம் தம்பிகளா இந்த வழி எங்கே போகிறது என கேட்டார். அதற்கு சிறுவர்கள் இந்த வழி எங்கும் போகாது நாம் தான் அந்த வழியாக போக வேண்டும் என்றனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கம்பரிடம் நீங்கள் எங்கே போக வேண்டும் என்று ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கேட்டனர். அதற்கு கம்பர் நான் முடிக்கரை போக வேண்டும் என்றார்.

உடனே சிறுவர்கள் அடிக்கரையை பற்றி போனால் முடிக்கரை செல்லலாம் என தெரிவித்தனர். உடனே கம்பர் தம்பிகளா நான் பெரிய கவி என நினைத்துக்கொண்டிருந்தேன். நீங்கள் என்னை விட திறமைசாலிகளாக உள்ளீர்கள் என்று கூறி மீண்டும் வழியை கேட்டார். உடனே அந்த சிறுவர்கள் இந்த கண்மாயின் அடிக்கரையிலிருந்து கண்மாய் முடியும் வரை சென்றால் நீங்கள் கேட்கும் முடிக்கரை என்ற ஊர் வரும் என்றனர்.

ஆடு மேய்க்கும் சிறுவர்களிடம் உள்ள புத்திக்கூர்மையை கண்ட கம்பர் இந்த மண்ணில் ஏதோ விசேஷம் உள்ளது என்று அங்கேயே தங்கினார். அந்த இடம்தான் இன்றைய நாட்டரசன்கோட்டை ஆகும். கம்பர் அப்பகுதி மக்களுக்கு இலவச சித்த வைத்தியம் செய்து கொண்டே இலக்கிய பணிகளை ஆற்றி வந்தார். பின்னர் ஒரு நாள் அவர் ஜீவ சமாதி ஆகினார். அதன் பின் அப்பகுதி மக்கள் கம்பரின் சேவையை போற்றும் வகையில் கம்பர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் ஒரு கல்லை நட்டு வணங்கி வந்தனர்.

150 ஆண்டுகள் கழித்து கம்பருக்கு அப்பகுதி மக்கள் கோவில் எழுப்பினர். தற்போது 5 ஏக்கர் நிலப்பரப்பில் அழகிய வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் தோட்டத்தின் நடுவே இருக்கும் அக்கோவில் கம்பரின் புகழ் பரப்பி வருகிறது. கோவிலின் உள்ளே பீடத்தின் மீது லிங்கமும் இருபுறமும் விநாயகர் சுவாமி சிலைகளும், பீடத்தின் எதிரே நந்தியும், வெளியே இருபுறமும் கோவிலை நிறுவிய தமிழ் சான்றோர்களின் சிலையும், பால தண்டாயுதபாணி சிலையும் உள்ளது.

கோவிலின் எதிரே கம்பர் விரும்பி போற்றி பாடிய அனுமனுக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகள் அறிவில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்பதற்காக கம்பர் கோவில் வந்து இங்குள்ள மண்ணை எடுத்து தண்ணீரோடு சேர்த்து குழந்தைகளுக்கு தீர்த்தமாக கொடுக்கின்றனர். கம்பர் கம்பராமாயணத்தை கலியாண்டு 3986 சகாப்தம் 807 விசுவாவசு வருடம் அதாவது கி.பி.886-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ம் தேதி அஸ்த நட்சத்திர நாளில் அரங்கேற்றினார். அதனை நினைவூட்டும் வகையில் நாட்டரசன்கோட்டையில் கம்பர் கோவிலில் விழா நடந்து வருகிறது.

Tags:    

Similar News