கோவில்கள்

நீலகண்ட சாமி கோவிலின் எழில்மிகு தோற்றம்.

மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பத்மநாபபுரம் நீலகண்டசாமி திருக்கோவில்

Published On 2022-11-24 05:15 GMT   |   Update On 2022-11-24 05:15 GMT
  • சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் 7-வது தலமாக கருதப்படுகிறது.
  • கோவில் எப்போது கட்டப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை.

குமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் கல்குளம் நீலகண்டசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்று சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் 7-வது தலமாக கருதப்படுகிறது. சுற்றுலா நகரமான பத்மநாபபுரம் ஒரு ஆன்மிக நகரமாகவும் விளங்குகிறது. பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஆட்சி புரிந்த மன்னர்கள் இறைவனை தரிசிப்பதற்காக அரண்மனையை சுற்றிலும் பல கோவில்களை கட்டியுள்ளனர். அதில் ஒன்று தான் நீலகண்டசாமி கோவில்.

வானுயர்ந்த ராஜகோபுரம், அழகான தெப்பக்குளம், சிற்பங்கள் நிறைந்த மகாமண்டபம் என கலை அம்சத்துடன் காணப்படும் இந்த கோவில் வேணாட்டு மன்னரான உதய மார்த்தாண்டன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஆனால் கோவில் எப்போது கட்டப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை.

சுயம்புவாக சிவன்

அப்போது கோவிலில் சிவலிங்கம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோவிலின் மேற்கில் தோட்டத்தில் உள்ள சிவன் ஆதிசிவன் எனப்படுகிறார். இந்த லிங்கத்தின் உயரம் 160 செ.மீ. இந்த சிவன் சுயம்புவாக வளர்ந்தவர் என்பது ஐதீகம். வேணாட்டரசர்கள் இங்கே இருந்த போது தறிகெட்டு ஓடிய குதிரை ஒன்று கோவில் இருக்கும் இடத்திற்கு வந்து அடைபட்டு நின்றதாம்.

அரசன் குதிரை நின்ற இடத்தில் சுயம்புவான லிங்கத்தை கண்டாராம். எனவே அந்த இடத்தில் கோவிலை கட்டினார் என்கிறது தலப்புராணம். ஆனந்தவல்லி அம்மனுக்கு இக்கோவிலில் தனி சன்னதி உள்ளது.

இங்கு கிழக்கு பிரகாரம் கி.பி.17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம். இங்குள்ள மண்டபத்தை மதுரை நாயக்க மன்னனாரன திருமலை நாயக்கர் கட்டினார் என்பது மரபுவழி செய்தி.

பரிவார தெய்வங்கள்

கணபதி, சாஸ்தா, பூதத்தான், மாடன்தம்புரான், ஆதிமூல சிவன் ஆகியோர் பரிவார தெய்வங்களாக உள்ளனர். கிழக்கு பிரகாரம் வடக்கே சிறு கருவறையில் நடராஜரும், சிவகாமியும் உள்ளனர். இவை செப்பு படிமங்கள்.

இக்கோவிலில் ஒரே இடத்தில் இரண்டு சன்னதிகள் இருந்தால் வாஸ்து தோஷம் ஏற்பட்டு விடும் என்பதால் சிவபெருமான் சன்னதிக்கும், ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கும் இடையில் ஒக்கத்துப்பிள்ளையார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இரண்டு கொடிமரங்கள் கொண்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

திருவிழா

10-ம் நாள் விழாவில் நடக்கும் தேர்திருவிழாவின்போது பெரிய தேரில் சிவபெருமானும், ஆனந்தவல்லியும் அமர, சிறிய தேரில் ஒக்கத்து பிள்ளையார் அமர்ந்து வீதி உலா வருவார்கள்.

இதுபோல் நவராத்திரியின் போது கோவில் குளத்தில் தெப்பத் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். அப்போது வண்ண விளக்கில் ஒளிரும் தெப்பத்தில் அமர்ந்து சுவாமிகள் குளத்தை வலம் வரும் காட்சியை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இது போல் தினமும் இருவேளை பூஜை என அனைத்து சம்பிரதாய சடங்குகளும் இக்கோவிலில் நடந்து வருகிறது. இங்கு தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது.

காலை 5.30 மணிக்கு நிர்மால்யம், 6 மணிக்கு உஷபூஜை, 10 மணிக்கு அபிஷேகம், 11 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 5 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு சாயராட்சை, இரவு 7.30 மணிக்கு அர்ச்சாம பூஜை நடக்கிறது.

Tags:    

Similar News